< Back
மாநில செய்திகள்
அண்ணாநகரில் மாநகர பஸ்சை மறித்து ரகளை: கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை காட்டி விரட்டி அடிப்பு
சென்னை
மாநில செய்திகள்

அண்ணாநகரில் மாநகர பஸ்சை மறித்து ரகளை: கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை காட்டி விரட்டி அடிப்பு

தினத்தந்தி
|
8 Sept 2022 1:44 PM IST

அண்ணாநகரில் மாநகர பஸ்சை மறித்து ரகளை செய்த கல்லூரி மாணவர்கள், பட்டாக்கத்தியை காட்டி விரட்டியடிக்கப்பட்டனர்.

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து ஆவடி நோக்கி மாநகர பஸ் (தடம் எண் 40 எச்) நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. அண்ணா நகர் ரவுண்டானா அருகே சென்றபோது திடீரென பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சின் முன்பு கூட்டமாக வந்து நின்று பஸ்சை வழிமறித்தனர்.

மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்த மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேரை கீழே இறக்கி விடுமாறு கூறி பஸ்சின் கண்ணாடியை கைகளால் தட்டி ரகளை செய்தனர். இதனால் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து டிரைவர் பஸ்சின் கதவை திறந்தார். உடனே அந்த பஸ்சில் பயணம் செய்த மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியுடன் பஸ்சில் இருந்து இறங்கி, பஸ்சை மறித்து கூச்சலிட்டபடி இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விரட்டிச்சென்றனர்.

இதனை சற்றும் எதிர்பாராத பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை பயமுறுத்தும் விதமாக மாநில கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை தரையில் உரசியபடி நெருப்பு பொறி பறக்கவிட்டபடி விரட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அங்கிருந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் போலீசார், அதில் பட்டா கத்தியோடு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விரட்டிச்சென்ற மாநில கல்லூரி மாணவர்களான பாடி குப்பம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யா (வயது 22), கவுதம் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். அத்துடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எதற்காக மாநகர பஸ்சை மறித்து மாநில கல்லூரி மாணவர்களை கீழே இறக்கிவிடும்படி கூறி கூச்சலிட்டனர். அவர்களை மாநில கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் விரட்டிச்சென்றது ஏன்? அவர்களுக்குள் முன்விரோதம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணா வளைவு அருகே நேற்று அமைந்தகரை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற பச்சையப்பன் கல்லூரி மாணவரான திருவள்ளூரைச் சேர்ந்த மோகன் (19) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 2 அடி நீள கத்தி இருந்தது.

கத்தியை பறிமுதல் செய்த போலீசார், மோகனை கைது செய்தனர். பட்டாக்கத்தியுடன் தங்களை விரட்டிய மாநில கல்லூரி மாணவர்களை பழிவாங்க அவர் கத்தியுடன் நின்றாரா? என்ற கோணத்தில் மோகனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்