அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருத்தரை விட்டா ஒருத்தருக்கு வழி கிடையாது என்கிற நிலைதான் உள்ளது - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
|அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருத்தரை விட்டா ஒருத்தருக்கு வழி கிடையாது என்கிற நிலைதான் உள்ளது என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
திருச்சி,
திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் கையெழுத்திடாமல் உள்ளார். எனவே தமிழ்நாடு முழுவதும் அணி திரண்டு வந்து கவர்னரை கண்டித்து நாளை (புதன்கிழமை) சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து பா.ஜ.க.வை கண்டித்து வருகிற 15-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட அளவில், ஒன்றிய அளவிலும் நடைபெற உள்ளது.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் ஒருத்தரை விட்டா ஒருத்தருக்கு வழி கிடையாது என்கிற நிலைதான் உள்ளது. அ.தி.மு.க.வை விட்டுவிட்டு பா.ஜ.க. ரோட்டிலா நிற்கும்? காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பாத கட்சிகள் கூட பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள்.
மாநிலங்களுக்கு வருகை தரும் பிரதமரை, முதல்-அமைச்சர் புறக்கணிப்பது புத்திசாலித்தனம் இல்லை. அதற்கு பதிலாக அந்த விழாவில் பங்கேற்று மாநிலங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் தெலுங்கானா முதல் மந்திரி புறக்கணித்தது அவருடைய விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.