< Back
மாநில செய்திகள்
கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேலி அமைக்க வந்த என்.எல்.சி. அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
கடலூர்
மாநில செய்திகள்

கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேலி அமைக்க வந்த என்.எல்.சி. அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

தினத்தந்தி
|
2 Oct 2023 12:26 AM IST

வளையமாதேவியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேலி அமைக்க வந்த என்.எல்.சி. அதிகாரிகளை கிராமமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேத்தியாத்தோப்பு,

2-வது சுரங்க விரிவாக்க பணி

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக 2-வது சுரங்க விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, ஆதனூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் நிலங்களை என்.எல்.சி. கையகப்படுத்தியது.

நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததும் நினைவு கூறத்தக்கது.

வேலி அமைக்க எதிர்ப்பு

வளையமாதேவி ஆயிகுளம் பகுதியில் என்.எல்.சி. நிர்வாகம் ஏற்கனவே கையகப்படுத்தி இருந்த நிலத்தில் வேலி அமைக்க முடிவு செய்தது. இதற்காக என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை 2 பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு வந்தனர்.

இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு முழு தொகை வழங்கப்படவில்லை, மோட்டார் பம்பு செட்டுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை, இவற்றை வழங்கினால்தான் பணி செய்ய விடுவோம் என்று கூறி வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கிருந்து சென்றனர். இதனால் வளையமாதேவி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்