< Back
மாநில செய்திகள்
நிலத்தகராறில்  மூதாட்டி அரிவாளால் வெட்டி படுகொலை; விவசாயி கைது
தேனி
மாநில செய்திகள்

நிலத்தகராறில் மூதாட்டி அரிவாளால் வெட்டி படுகொலை; விவசாயி கைது

தினத்தந்தி
|
15 July 2022 9:34 PM IST

பெரியகுளம் அருகே மூதாட்டியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்

நிலத்தகராறு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 64). இவரது தம்பி ராஜூ (56.). விவசாயி. இவர்களுக்கு அந்த பகுதியில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை 2 பேரும் பிரித்து கொண்டனர். இதில் வெள்ளைச்சாமியின் பங்கு அவரது மனைவி ராமுத்தாய் (60) பெயரில் இருந்தது. அந்த நிலத்தில் 2 பேருக்கும் பொதுவான மின் இணைப்பு உள்ளது.

இந்நிலையில் ராமுத்தாய் தனது நிலத்தை விற்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜூ மின் இணைப்பை தனது நிலத்திற்கு மாற்றி தருமாறு ராமுத்தாயிடம் கேட்டார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

பின்னர் ராமுத்தாய் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அங்கு சென்ற ராஜூ அவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ராஜூ மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராமுத்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் கீழே விழுந்த ராமுத்தாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ராஜூ அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்கரை போலீசார் ராமுத்தாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ராஜூ பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் மூதாட்டியை விவசாயி வெட்டி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்