< Back
மாநில செய்திகள்
குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவ-மாணவிகள் காயமின்றி தப்பினர்
சென்னை
மாநில செய்திகள்

குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவ-மாணவிகள் காயமின்றி தப்பினர்

தினத்தந்தி
|
30 Jun 2022 7:03 AM IST

குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயமின்றி தப்பினர்.

திருத்தணி நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ரூ.109 கோடியே 68 லட்சம் செலவில் பாலாறு ஆற்றின் திருபாற்கடல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சியில் குழாய்கள் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை நகராட்சிக்கு உள்பட்ட காந்திரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மாணவ-மாணவிகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி பஸ் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது, நகராட்சியில் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டபட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒருபக்கமாக சாய்ந்த பஸ்சை டிரைவர் உடனடியாக நிறுத்திவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மாணவ-மாணவிகளை பஸ்சில் இருந்து கிழே இறக்கி விட்டனர். இதனால் பள்ளி பஸ்சில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயமி்ன்றி தப்பினர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு மாணவ-மாணவிகளை பத்திரமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். நகராட்சியில் இருந்து வந்த பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியில் எடுத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்