தேனி
வரப்பு தகராறில்விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை:பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு
|பெரியகுளம் அருகே வரப்பு தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
விவசாயி கொலை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 55). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (38). இவர்கள் இருவரும் போடாங்குளம் கண்மாய் புறம்போக்கு இடத்தில் அருகருகே விவசாயம் செய்து வந்தனர்.
இவர்களுக்கு இடையே வயலுக்கு செல்லும் வரப்பு தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2021-ம்ஆண்டு மே மாதம் 17-ந் தேதி செல்வம் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், முருகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் செல்வத்தின் இடது காலை வெட்டினார். இந்த சம்பவத்தில் செல்வம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் குற்றவாளியான முருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.