< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

3 மணல் குவாரிகளில், டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
13 Oct 2023 2:04 AM IST

தஞ்சை மாவட்டத்தில், கொள்ளிடம் ஆற்றில் 3 மணல் குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாட்டில் ஆறுகளில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அரசு விதிமுறைகளின் படி மணல் அள்ளப்படுகிறதா? என்பது குறித்து மணல் குவாரிகளில் ஆய்வு செய்தனர். மேலும் மணல் குவாரிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையின் ஒரு அங்கமாக நேற்று காலை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவிலடியில் கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்தது.

டிரோன் கேமரா மூலம் ஆய்வு

தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் உடன் வர கோவிலடி மணல் குவாரி பகுதிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி செயல்பட்ட இடங்கள் குறித்த அடையாளம் இடப்பட்ட பகுதிகளில் அரசு நிர்ணயித்த ஆழத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்பதை டிரோன் கேமராவை பறக்கவிட்டு படம் எடுத்தனர்.இதற்காக சக்தி வாய்ந்த டிரோன் கேமரா கொண்டு வரப்பட்டு இருந்தது. அந்த டிரோன் கேமராவை கையாளுவதற்கு உரிய தொழில்நுட்ப வல்லுனர்கள் உடன் வந்து இருந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வு நடந்தது. ஆய்வை முடித்துக்கொண்டு அவர்கள், தாங்கள் வந்த கார்களில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர்.அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடந்து கொண்டிருந்தபோது அருகில் இருந்த மணல் குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் விற்பனை வழக்கம்போல் நடந்து வந்தது.

திருவையாறு

இதேபோல் திருவையாறை அடுத்த மருவூரில் அமைந்துள்ள அரசு மணல்குவாரியில் நேற்று முன்தினம் மாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், மணல் குவாரியில் அரசு விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக டிரோன் கேமராவை இயக்க முயன்றனர். ஆனால் திடீரென காற்று வீசியதுடன் லேசாக மழை பெய்ய துவங்கியதால், டிரோனை இயக்க முடியாத சூழலில் ஆய்வை ரத்து செய்து விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

நேற்று மீண்டும் இரண்டாவது நாளாக மணல் குவாரிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், குவாரியில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட மணல் ஆழம், அகலம் மாறுப்பட்டுள்ளதால் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டுள்ளதா? என டிஜிட்டல் மீட்டர் மூலம் அளவீடு செய்தனர். பின்னர் டிரோன் கேமரா மூலம் நிலபரப்பையும் ஆய்வு செய்தனர்.

அய்யம்பேட்டை

இதேபோல் அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடியில், கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரி பகுதிக்கு நேற்று மாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர், கான்பூர் ஐ.ஐ.டி. குழுவினர் 5 பேர் என 2 கார்களில் வந்தனர். இவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிய பகுதியில் டிரோனை பறக்க விட்டனர். சுமார் 300 அடி உயரம் வரை பறந்து சென்ற டிரோன், மணல் எடுத்த பகுதிகளை படம ்பிடித்தது. படப்பதிவுகளை சேகரித்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்