கடலூர்
10 இடங்களில் பொதுவினியோக திட்ட குறைகேட்பு கூட்டம்
|கடலூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட குறைகேட்பு கூட்டம் 10 இடங்களில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது
கடலூர்
குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) பொது வினியோகத் திட்ட குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அதாவது கடலூர் தாலுகா தோட்டப்பட்டு, பண்ருட்டி சிறுகிராமம், குறிஞ்சிப்பாடி ஆதிநாராயணபுரம் (கிழக்கு), சிதம்பரம் தாலுகா கிள்ளை(தெற்கு), காட்டுமன்னார்கோவில் குமாரக்குடி, புவனகிரி தாலுகா சி.புதுப்பேட்டை, விருத்தாசலம் மாத்தூர், திட்டக்குடி எறையூர், வேப்பூர் மண்ணம்பாடி, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா சோழத்தரம் உள்ளிட்ட பகுதிகளில் இம்முகாம் நடக்கிறது.அதனால் மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இதில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.
மாற்றுத்திறனாளிகள்
மேலும் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் மற்றும் 60 சதவீத ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொது வினியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனு அளிக்கலாம்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். 3-ம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்பஅட்டை பெறுவதற்கு மனு அனுப்பலாம். மேலும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் மனுக்களை முகாம்களில் அளித்து பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவல்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.