கள்ளக்காதலுக்கு இடையூறு: கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி
|கூலிப்படையினர் கத்தி மற்றும் உருட்டு கட்டைகளால் பாரிச்சாமியை கடுமையாக தாக்கினர்.
திண்டுக்கல்,
மதுரை வடக்கு தாலுகா சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பாரிச்சாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (40). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மதுரை மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர், அபுதாபியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். மேலும் தனது சொந்த ஊரில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். அந்த கோழிப்பண்ணையில் பாரிச்சாமி, தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வரும்போது ரமேஷ், அடிக்கடி கோழிப்பண்ணைக்கு வந்து சென்றார். அப்போது, பரிமளாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த பாரிச்சாமி, அவர்களை கண்டித்தார். ஆனால் 2 பேரும் கள்ளக்காதலை கைவிட மறுத்தனர்.
இந்தநிலையில் ரமேஷின் கோழிப்பண்ணையில் வேலை செய்வதை பாரிச்சாமி நிறுத்தி விட்டார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெரியப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் காவலாளியாக பாரிச்சாமி வேலைக்கு சேர்ந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கோழிப்பண்ணைக்கு அவர் வந்து விட்டார். இதுதொடர்பாக பரிமளா, வெளிநாட்டில் உள்ள ரமேசுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தனது கணவர் தன்னை இங்கு அழைத்து வந்து அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறி கதறி அழுதார். கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள தனது கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று பரிமளா கூறினார். அதற்கு ரமேசும் ஒப்புக்கொண்டார்.
தான் வெளிநாட்டில் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், செலவுக்கு பணம் கொடுத்து விடுவதாகவும் ரமேஷ் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து பரிமளா, தனக்கு தெரிந்த மதுரையை சேர்ந்த குமார் (36) என்பவரின் உதவியை நாடினார். அவரும், பாரிச்சாமியை தீர்த்து கட்ட உதவுவதாக தெரிவித்தார். குமார், கூலிப்படை தலைவனிடம் பேசி பாரிச்சாமியை தீர்த்துக்கட்ட பரிமளாவிடம் ரூ.1½ லட்சம் கேட்டார். அந்த பணத்தை கொடுக்க பரிமளா சம்மதம் தெரிவித்தார்.
இதனையடுத்து முதற்கட்டமாக பரிமளாவின் வங்கி கணக்கில், ரூ.20 ஆயிரத்தை ரமேஷ் அனுப்பினார். இதனை கூலிப்படையில் உள்ள 17 வயது சிறுவனிடம் பரிமளா கொடுத்தார். மீதி பணத்தை பாரிச்சாமியை தீர்த்து கட்டியபிறகு தருவதாக பரிமளா தெரிவித்தார். இதற்கிடையே பரிமளா திட்டப்படி, கடந்த 12-ந்தேதி இரவு 10 மணி அளவில் பெரியப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணைக்குள் 7 பேர் கொண்ட கூலிப்படையினர் புகுந்தனர். அங்கிருந்த பாரிச்சாமி, அவர்களிடம் நீங்கள் யார்?, எதற்காக இங்கு வந்தீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், முயல் வேட்டைக்கு வந்ததாகவும், சற்று நேரம் அங்கு நின்று மழை நின்றவுடன் சென்று விடுவதாகவும் கூறினர். அதன்பிறகு பாரிச்சாமி தனது வீட்டுக்குள் சென்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பாரிச்சாமி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார்.
அந்த சமயத்தில், கூலிப்படையை சேர்ந்தவர்கள் கத்தி மற்றும் உருட்டு கட்டைகளால் பாரிச்சாமியை கடுமையாக தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓடி வந்தனர். மேலும் தனது தந்தையை தாக்க விடாமல் தடுத்தனர். ஆனால் பரிமளா கண்டுகொள்ளவே இல்லை. தாக்குதலில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று கருதிய கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்தநிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பாரிச்சாமியை, பரிமளா மற்றும் குழந்தைகள் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இது தொடர்பாக வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் பரிமளா புகார் அளித்தார். அதில், தனது கணவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கினர் என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், எதுவும் தெரியாதது போல பரிமளா அன்றாட வேலையை செய்து கொண்டிருந்தார். இதற்கிடையே வெளிநாட்டில் உள்ள ரமேசை, கூலிப்படையினர் தொடர்பு கொண்டனர். பாரிச்சாமியை தீர்த்து கட்டி விட்டோம் என்றும், தாங்கள் பேசியபடி பணத்தை தருமாறும் கூறினர். இதனையடுத்து 17 வயது சிறுவனின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்தை ரமேஷ் அனுப்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாரிச்சாமியின் அருகே இருந்து கவனிப்பது போல பரிமளா நடித்தார். ஒரு கட்டத்தில் பரிமளா, தனது கணவரை நேரடியாக மிரட்டினார். அதாவது, இனிமேல் நீங்கள் என் விஷயத்தில் தலையிடாமல் இருங்கள். அப்போது தான் உங்களுக்கு நல்லது. தற்போது உங்களை கொல்ல முயற்சி செய்தது என்னுடைய ஆட்கள் தான். இனிமேலும் என்னையும், ரமேசையும் பிரிக்க நினைத்தால் நீங்கள் உயிருடன் இருக்க முடியாது என்று திடீரென மிரட்டல் விடுத்தார். இதனை கேட்டு பாரிச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.
இந்தசூழ்நிலையில் பாரிச்சாமியின் தாயார் சின்னபிள்ளை, தனது மகனை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு பரிமளா இல்லை. இதனால் பாரிச்சாமி, தன்னை கூலிப்படையை ஏவி பரிமளா கொலை செய்ய முயன்ற தகவலை தனது தாயிடம் தெரிவித்தார். இதனால் சின்னபிள்ளை அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து சின்னபிள்ளை தனது உறவினர்களுடன், வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். அதன்பேரில் வேடசந்தூர் துணை சூப்பிரண்டு துர்காதேவி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பரிமளாவை ரகசியமாக கண்காணித்தனர். மேலும் கூலிப்படையினரையும் கூண்டோடு பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாமக்கல் மாவட்டம் வேலூர் பகுதியில் பரிமளா மற்றும் கூலிப்படையினர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பரிமளா, கூலிப்படையை சேர்ந்த குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூலிப்படையினர் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி மனைவியே கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.