பெரம்பலூர்
மக்காச்சோளம் சாகுபடியில் ஏற்படும் பாதிப்புகள்-எதிர்பார்ப்புகள் என்ன? விவசாயிகள் கருத்து
|மக்காச்சோளம் சாகுபடியில் ஏற்படும் பாதிப்புகள்-எதிர்பார்ப்புகள் என்ன? என்பது குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முதலிடம்
உணவிற்கு ஆதாரமாக விளங்குவது விவசாய தொழில். அந்த விவசாய தொழிலே பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாகும். மாவட்டத்தில் பெரும்பாலும் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் முக்கிய பயிராக மக்காச்சோளம் சாகுபடி ெசய்யப்படுகிறது. தமிழகத்திலேயே மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலூர் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. மாவட்டத்தில் இந்த நிதி ஆண்டில் மொத்தம் 64 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதாவது மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிப்பு. கடந்த 2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கில் உற்பத்தி செய்யப்பட்ட மக்காச்சோளத்திற்கு சரியான விலை கிடைக்கவில்லை. 2020-ம் ஆண்டில் மழை, புயலினால் மக்காச்சோளம் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராகி இருந்த மக்காச்சோள கதிர்கள் தண்ணீரில் மூழ்கி, மீண்டும் முளைக்க தொடங்கின. இவ்வறு கடந்த 4 ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டது.
தொழிலாளர்கள் கிடைப்பதில்லை
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட பகுதிகளில் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மக்காச்சோள பயிரை அமெரிக்கன் படைப்புழு தாக்கியது. அதனை விவசாயிகள் பல மருந்துகள் அடித்து கட்டுப்படுத்தி மக்காச்சோளத்தை அறுவடைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் தரமற்ற மக்காச்சோள விதைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆய்வு செய்து தரமான விதைகள், கலப்படமற்ற உரங்கள் வழங்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. ஆனாலும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. களை எடுக்க ஆட்கள் இல்லாததால் விவசாயிகள் களை கொல்லி மருந்து அடிக்கின்றனர். அதிக உரம் போடும் நிலை உள்ளது. அமெரிக்கன் படைப்புழு தாக்காமல் இருக்க டிரோன் மூலம் மருந்து அடிக்க வேண்டிய நிலை உள்ளது.
மக்காச்சோளம் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு ஆகிறது. ஆனால் மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை. மக்காச்சோளத்தை குவிண்டால் ரூ.3 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்தால்தான் ஓரளவுக்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். பெரம்பலூர் மற்றும் பூலாம்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் கேட்ட விலைக்கு மக்காச்சோளத்தை விவசாயிகள் கொடுக்க வேண்டியிருப்பதால், தற்போது அந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் மக்காச்சோளத்தை கொண்டு செல்வதில்லை என்று கூறப்படுகிறது.
கோரிக்கைகள்
மேலும் போக்குவரத்து செலவு அதிகமாவதால், நேரடியாக வரும் வியாபாரிகளிடம் மக்காச்சோளத்தை விவசாயிகள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்களும் எடை மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே குன்னம் தாலுகாவில் அதிகளவு மக்காச்சோளம் பயிரிடுவதால் அங்கு புதிதாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் தொடங்க வேண்டும். மேலும் அறுவடை காலங்களில் மக்காச்சோளத்திற்கு நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகமாக திறக்க வேண்டும்.
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் நாமக்கல் மாவட்டத்திற்கு கோழி, கால்நடைகளின் தீவனங்களுக்காகவும் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுக்க வேண்டும். மக்காச்சோளம் அறுவடைக்கு பின்னர் கோடை உழவு குறித்து விவசாயிகளிடம் வேளாண்மை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கைகளாக உள்ளது. மேலும் இது பற்றி விவசாயிகள் கூறியதாவது:-
படைப்புழுவால் பாதிப்பு
ஓலைப்பாடியை சேர்ந்த அன்புமணி:- குன்னம் பகுதியில் அதிகமாக மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இதற்கு பருத்தி உள்ளிட்ட மற்ற பயிர்களை விட வேலை குறைவு, செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக மக்காச்சோளத்தை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். ஆனால் சமீப காலமாக மக்காச்சோளத்தை பாதிக்கும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் விவசாயிகளுக்கு வேலைப்பளு முன்பை விட அதிகமாகி உள்ளது. படைப்புழு தாக்கும் போதெல்லாம் வேளாண்துறை அலுவலர்கள் கோடை உழவு ஓட்டினீர்களா?, வேப்பம் புண்ணாக்கு போட்டீர்களா? என்று கேள்விகளை கேட்ட வண்ணம் உள்ளனர். இவ்வாறு காரணம் சொல்வதை விடுத்து, கோடையில் இருந்தே உரிய முறையில் அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் உதவியோடு துண்டு பிரசுரங்கள், பதாகைகள், கூட்டங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
படைப்புழுத் தாக்குதல் விதை ரகங்களுக்கு ஏற்ப மாறுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர். ஒரு சில ரகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கதிர்களும் வருகிறது. இது குறித்து வேளாண்துறை அலுவலர்கள் விதை நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதைகளை முறையாக பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டும். மக்காச்சோள அறுவடை காலங்களில் அன்றன்றைய விலையை வேளாண் துறை அறிவிக்க வேண்டும்.
தற்காலிக கொள்முதல் நிலையங்கள்
விவசாயிகள் தாங்கள் விளைவித்த மக்காச்சோளத்தை பெரம்பலூருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து செலவும் விவசாயிகளுக்கு அதிக சுமையாக உள்ளது. எனவே ஆங்காங்கே தற்காலிக கொள்முதல் நிலையங்களை மாவட்டந்தோறும் ஏற்படுத்த வேண்டும். புற்றீசல்கள் போல பெருகி வரும் எடை மேடை நிலையங்கள் சரியாக செயல்படுகின்றனவா? என்றும் கண்காணிக்க வேண்டும். பறக்கும் படைகளை அமைத்து அவ்வப்போது ஆய்வு செய்வதோடு, அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும். கொள்முதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தனி செல்போன் எண்ணை வழங்க வேண்டும். படைப்புழு தாக்குதல் ஏற்பட்டால் அதற்கான மருந்தை போதிய அளவு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.