பெரம்பலூர்
மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்-பல்வேறு தரப்பினர் கருத்து
|தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.
வாழ்நாள் வரி...
முன்பு மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியாக (லைப் டேக்ஸ்) 8 சதவீதம் பெறப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது ரூ.1 லட்சம் வரை விற்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இனி 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்படும் மோட்டார் சைக்கிளுக்கு 12 சதவீதம் வரியும் வசூலிக்கப்படும்.
அதுபோல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டு அடுக்கு முறையில், அதாவது ரூ.10 லட்சம் வரையிலான ஒரு காருக்கு 10 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீதம் வரியும் பெறப்பட்டு வந்தது.
ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள்
அது தற்போது நான்கு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள கார்களுக்கு 12 சதவீதம் வரியும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதம் வரியும், ரூ.20 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 20 சதவீதம் வரியும் இனி வசூலிக்கப்படும்.
இதுதவிர பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்றவைகளும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆம்னி பஸ்கள், கல்வி நிறுவன வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவைகளுக்கும் வரிவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகள் வருமாறு:-
வரிச்சலுகை வேண்டும்
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன்:- போக்குவரத்து துறையில் ஆட்கள் பற்றாக்குறை, டயர் உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதுவும் குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு அனைத்து உதிரி பாகங்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. முன்பு எல்லாம் புதிய பஸ் ஒன்றை ரூ.35 லட்சத்தில் வாங்கிவிட முடியும். ஆனால் தற்போது புதிய பஸ் ரூ.75 லட்சமாக உயர்ந்து உள்ளது. அதேபோல் வாகனங்களுக்கு சாலை வரி என்ற ஒன்றுதான் முன்பெல்லாம் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணமும், மாநில அரசு சாலை வரி என 2 வரிகளை வசூலிக்கின்றன. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து தொழில் நலிவடைந்து வருகிறது. வேறு வழியில்லாமல் 'புலிவாலை பிடித்த கதையாக' இந்த தொழிலை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவித்து வருகிறோம். மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 2 ஆண்டுகள் வரி சலுகைகள் வழங்குவது போல், போக்குவரத்து தொழில் ஆரோக்கியமாக நடக்க மத்திய, மாநில அரசுகள் டீசல் மற்றும் வரிகளில் சலுகைகள் வழங்கி தொழிலை காக்க வேண்டும். அத்துடன் கார் போக்குவரத்து பயன்பாட்டை குறைத்து வெளிநாடுகள் செய்வது போல் பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கொண்ட சமுதாயத்தை படைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சாமானியனின் கனவு...
பெரம்பலூா் அருகே எளம்பலூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ரஞ்சித்குமார்:- இன்றைய நவீன உலகில் வாகன போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஏழை, எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை இன்று வாகனங்களை வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதன் மூலம் நேரத்தையும் காலத்தையும் கடந்து மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு அடிப்படை தேவைகள் போன்றவற்றை எல்லாம் எளிதில் பெற்று பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசு இதுபோன்று வாகன வரிகளை உயர்த்துவதால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைகளும் உயரும். அது மட்டுமல்லாது வாகனம் வாங்க வேண்டும் என்று நினைக்கின்ற சாமானியனின் கனவு இங்கே தவிடுபொடியாகிறது. வாகன வரி உயர்வு என்பது மக்களுடைய அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாகவே அமைகிறது. ஏனென்றால் இன்று வாகனம் இல்லாமல் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. காலை தொடங்கி இரவு வரை ஒவ்வொரு மக்களின் இடம் பெயர வாகனம் என்பது அடிப்படை தேவையாகவே இங்கே பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வாகனங்களின் வரி உயர்வை தமிழக அரசு அறிவித்திருப்பது தீபாவளிக்காவது ஒரு புதிய வாகனத்தை வாங்கி விடலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் முயற்சியில் பெரிய பாறாங்கல்லை போட்டதாகவே நான் கருதுகிறேன். எனவே உடனடியாக வாகன வரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.
விலைவாசி உயரும்
குன்னம் தாலுகா, துங்கபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் இளங்கோவன்:- ஏற்கனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வால், வாகனங்களின் விலைகளும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இன்னும் உயர வாய்ப்புள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் இருசக்கர வாகனங்களை கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும். எனவே வாகனங்களின் வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.