< Back
மாநில செய்திகள்
புயல், கனமழை பாதிப்பு: தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை..!
மாநில செய்திகள்

புயல், கனமழை பாதிப்பு: தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை..!

தினத்தந்தி
|
5 Dec 2023 7:02 AM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை பதம் பார்த்துவிட்டது. பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தனர், ஆனால் அத்தியாவசிய பணி நிமித்தமாக வேலைக்கு போகும் ஊழியர்கள், வெளியூர் பயணிகள் உள்ளிட்டோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மக்கள் பெரிதும் நம்பி இருக்கும் புறநகர் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. மாநகர பஸ் போக்குவரத்து சேவையும் அதிக அளவில் காணப்படவில்லை.

சென்னையில் சாலைகள் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. அந்த அளவிற்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஆறுகளில் தண்ணீர் ஓடுவதுபோல சில சாலைகளில் தண்ணீர் ஓடியது.

இந்த நிலையில், புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது.

புயலின் தாக்கம் மேலும் தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன்றைக்கும் (செவ்வாய்க்கிழமை) பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், ''சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை 5-ந் தேதி மூடப்பட்டு இருக்கும். என்றாலும், அத்தியாவசிய சேவைகளான போலீஸ், தீயணைப்புத் துறை, உள்ளாட்சி அலுவலகங்கள், பால் வினியோகம், ஆஸ்பத்திரிகள், மருந்துக் கடைகள், மின்சார வினியோகம், போக்குவரத்து, பெட்ரோல் - டீசல் போன்ற எரிபொருள் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள், பேரிடர் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணியில் உள்ள அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்.'' என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்