தேர்தல் பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு உடனடியாக பயணப்படியை வழங்குக - அண்ணாமலை வலியுறுத்தல்
|தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில், பாராளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச் 16, 2024 முதல் ஜூன் 6, 2024 வரையிலான 83 நாட்களுக்கான பயணப்படி வழங்க ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை பிறப்பித்த பிறகும், இன்னும் காவலர்களுக்கான பயணப்படி வழங்கப்படவில்லை.
ஏற்கனவே, காவல்துறையினரின் கைகளைக் கட்டிப் போட்டு, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வைத்திருக்கிறது தி.மு.க. அரசு. தேவையில்லாத வீண் விளம்பரங்களுக்கு, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசு, காவலர்களுக்கு வழங்க வேண்டிய பயணப்படியை வழங்கத் தாமதிப்பது, காவல்துறையினரிடையே பணியாற்றும் ஆர்வத்தைக் குறைத்து விடும்.
உடனடியாக, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு, 83 நாட்களுக்கான பயணப்படியை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.