கோயம்புத்தூர்
165 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
|கோவையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 165 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் கோவை கோர்ட்டில் நடைபெற்றது.
இதை நீதிபதி ஜி.விஜயா தொடங்கி வைத்தார். இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய காசோலை வழக்கு, வாகன விபத்து, சிவில் வழக்கு, கடன்கள் மற்றும் கல்விக்கடன், குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த வழக்குகளை கோவை மாவட்ட டான்பிட் சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.என்.செந்தில்குமார், கோவை மாவட்ட 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் மொத்தம் 165 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இதன் மொத்த தீர்வு தொகை ரூ.12 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 602 ஆகும். 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த 4 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.
பிரிந்து வாழ்ந்த 3 தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ சமரசதீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.எஸ்.எஸ்.சிவா செய்து இருந்தார்.