பெரம்பலூர்
சிறப்பு குறைதீர் முகாம்களில் 271 மனுக்களுக்கு உடனடி தீர்வு
|சிறப்பு குறைதீர் முகாம்களில் 271 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் தாலுகாவிற்கு க.எறையூர் கிராமத்தில் நடந்த முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமை தாங்கி உணவு பொருள் வழங்கல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 16 கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடியாக தீர்வு கண்டார்.
இதேபோல் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு பெரிய வடகரை கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் தாலுகாவிற்கு எழுமூர் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு ஆதனூர் (தெற்கு) கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன் தலைமையிலும் முகாம் நடைபெற்றது.
அரியலூர் தாலுகாவிற்கு சென்னிவனம் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் தென்கச்சிப்பெருமாள் நத்தத்திலும், செந்துறை தாலுகாவில் நமங்குணத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் காட்டாத்தூரிலும் (தெற்கு) என 4 கிராமங்களில் முகாம் நடைபெற்றது. கூட்டத்தை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்தினார்கள். இதில் கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 91 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மொத்தம் 190 மனுக்களில், 180 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 10 மனுக்கள் நிலுவையில் உள்ளன. மாவட்டங்களில் அடுத்த பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி நடைபெறவுள்ளது. முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.