< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள்

தினத்தந்தி
|
18 Nov 2022 7:43 PM GMT

விருதுநகர் மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய உடனடி பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய உடனடி பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன்விவரம் வருமாறு:-

குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் ரோகிணி:-

நான் விருதுநகர் 26-வதுவார்டு சுண்ணாம்புகாரத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எங்களுக்கு குடிநீர் 10 தினங்களுக்கு ஒரு முறை வருகிறது. அதுவும் கலங்கலாக வருகிறது. அந்த தண்ணீரில் சாதம் வடித்தால் சில நேரங்களில் மஞ்சளாகி விடுகிறது. 10 தினங்களுக்கு ஒரு முறை வந்தாலும் 2 மணி நேரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுவதால் 10 தினங்களுக்கு தேவையான குடிநீரை பிடித்து வைக்க முடியவில்லை. தாமிரபரணி தண்ணீர் வந்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதேநிலைமை தான் மாவட்டத்தில் பல பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே விருதுநகர் நகராட்சி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 தினங்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

ரெயில்ேவ பாலம்

சிவகாசி சமூக ஆர்வலர் ராயல்மணி:- சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணி தொடங்கப்படாத நிலையில் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் ரெயில்வே கேட் மூடி இருக்கும் போது பெரிதும் சிரமப்படுகின்றனர். நகரின் மேற்கு பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த ரெயில்வே கேட்டை கடந்து சிவகாசிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் ரெயில்வே கேட் பூட்டப்படுவதால் பெரும் பாதிப்பு அடைகிறார்கள். மேற்கு பகுதியில் அதிக அளவில் பட்டாசு ஆலைகள் உள்ளது. இங்கு விபத்துக்கள் ஏற்பட்டால் தீக்காயம் அடையும் தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த ரெயில்வே கேட் பகுதியில் அவசர வழியும் இல்லை. எனவே மேம்பால பணியினை விரைவில் தொடங்க வேண்டும்.

நாய்கள் தொல்லை

ராஜபாளையம் செல்வமீனா கூறியதாவது:-

ராஜபாளையம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நாய்கள் தொல்லை அதிகரித்துதான் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் தொல்லையால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. குழந்தைகளை துரத்தி கடிப்பதால் எண்ணற்ற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் சுற்றுப்புற சூழலும் மாசு படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை மாவட்டம் முழுவதும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

சேதமடைந்த சாலை

வத்திராயிருப்பை சேர்ந்த ஆதிலட்சுமி:- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று பிளவக்கல் பெரியாறு அணை. இந்த அணைக்கு செல்லக்கூடிய கிழவன் கோவில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இங்கிருந்து பட்டுப்பூச்சி, பிளவக்கல் அணை, கோவிலாறு அணை ஆகிய பகுதிகளுக்கு தினமும் எண்ணற்ற பேர் சென்று வருகின்றனர். இந்த சாலை தற்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. ஆதலால் இந்த சாலையை சீரமைத்தால் இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பயன்பெறுவர்.

தூர்வாரப்படாத கண்மாய்

பாளையம்பட்டியை சேர்ந்த விவசாயி சங்கிலி:-

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்தநிலையில் கண்மாய்களுக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்துக்கால்வாய் தூர்வாரப்படாததால் கண்மாய்க்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை. அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கண்மாய்கள் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. மேலும் கண்மாய்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளை அகற்றி, கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான மின்கம்பம்

தாயில்பட்டி திருமலை:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீேழ விழும் அபாயநிலையில் காணப்படுகிறது. தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டி மேற்கு தெரு மற்றும் அசோக் நகரில் மின் கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் சேதமடைந்த ஆபத்தான மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்