< Back
மாநில செய்திகள்
கால்நடைகள் இறந்தால் உடனடியாக இழப்பீடு
நீலகிரி
மாநில செய்திகள்

கால்நடைகள் இறந்தால் உடனடியாக இழப்பீடு

தினத்தந்தி
|
1 Oct 2023 2:15 AM IST

மழை வெள்ளத்தில் சிக்கி கால்நடைகள் இறந்தால் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

மழை வெள்ளத்தில் சிக்கி கால்நடைகள் இறந்தால் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

முன்னேற்பாடு பணிகள்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நடைபெற்றது. கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் தலைமை தாங்கினார். அவர், பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளுக்கு 42 மண்டல குழுக்களை அமைத்து, 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனடி இழப்பீடு

இதையடுத்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பேசியதாவது:-

இயற்கை இடர்பாடுகளால் வீடுகள் சேதமடைந்தாலோ, கால்நடைகள் உயிரிழந்தாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வெட்டுகளை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் அவசர காலத்தில் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் நல்ல முறையில் செயல்படுகிறதா? என்பதை பரிசோதிக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி கட்டிடங்கள்

மழை வெள்ளத்தில் பயிர்கள் பாதித்தால் உடனடியாக கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். குடியிருப்புகள், சாலையோரங்களில் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும். பள்ளி கட்டிடங்களை கள ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் பாலுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்