< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி; காதலன் சாவு-காதலி உயிர் ஊசல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி; காதலன் சாவு-காதலி உயிர் ஊசல்

தினத்தந்தி
|
22 Jun 2022 9:15 PM IST

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது. இதில் காதலன் பரிதாபமாக இறந்தார். கள்ளக்காதலி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது. இதில் காதலன் பரிதாபமாக இறந்தார். கள்ளக்காதலி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கள்ளக்காதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 23). இவருக்கு திருமணமாகி மேரி என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். ராஜசேகரன் அம்பிளிக்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். அதே மருத்துவமனையில் அம்பிளிக்கையை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சுதா (30) என்பவரும் ஊழியராக பணியாற்றினார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதற்கிடையே ராஜசேகரனின் நடவடிக்கையில் அவரது மனைவி மேரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ராஜசேகரன்-சுதா கள்ளக்காதல் விஷயம் மேரிக்கு தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகரனிடம் அவர் கேட்டார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சுதாவுடனான சந்திப்பை நிறுத்த வேண்டும் என்று தனது கணவரை மேரி கண்டித்தார்.

விஷம் குடித்தனர்

இருப்பினும் அவர்கள் 2 பேரும் தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இதனால் ராஜசேகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ராஜசேகரன், தனது கள்ளக்காதலியிடம் தெரிவித்தார். அப்போது இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என எண்ணிய 2 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று ராஜசேகரனும், சுதாவும் ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூர் பால்கடை பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒன்றாக விஷம் குடித்தனர். இதில் 2 பேரும் மயங்கி சாலையோரத்தில் விழுந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காதலன் சாவு

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகரன் இறந்தார். சுதா ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்ததில், காதலன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்