சென்னை
சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக வழக்கு: இலங்கை அகதிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை - தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு
|சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக இலங்கை அகதி கைது செய்யப்பட்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் கிருஷ்ணலிங்கம் (வயது 43). 1998-ம் ஆண்டு, இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்தவர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு அழைத்து செல்லும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவுசெய்து கிருஷ்ணலிங்கத்தை தேடி வந்தனர். இந்த நிலையில், தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த கிருஷ்ணலிங்கத்தை, 2010-ம் ஆண்டு, கைது செய்தனர். அறையை சோதனை செய்ததில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சேட்டிலைட் போன் மூலம் பல்வேறு நாடுகளுடன் பேசி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 9 மொபைல் போன்கள், மடிகணினி, இந்திய அரசால் வழங்கப்பட்டது போன்ற போலியான ‛டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இவ்வழக்கு, தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சஹானா, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும், அபராத தொகை கட்ட தவறினால், மேலும், 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில், அரசு வக்கீல் காயத்ரி ஆஜரானார்.