நீலகிரி
இப்தார் நோன்பு திறப்பு
|கூடலூர் மாரியம்மன் கோவிலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
கூடலூர்,
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் நோன்பு தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளிவாசல்களில் தினமும் மாலையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு பிறகு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் கோவிலின் அன்னதான மண்டபத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கமிட்டி சார்பில், முஸ்லிம்களுக்கு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் கமிட்டியை சேர்ந்த பாபு, சம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கு சைவ உணவு பரிமாறினர். தொடர்ந்து நேற்று மேல் கூடலூர் பள்ளிவாசல் சார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாரியம்மன் கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் உள்பட அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர்.