கோயம்புத்தூர்
'கடினமாக உழைத்தால் வாய்ப்புகள் தேடி வரும்'
|‘கடினமாக உழைத்தால் வாய்ப்புகள் தேடி வரும்’ என்று பொள்ளாச்சியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் பேசினார்.
'கடினமாக உழைத்தால் வாய்ப்புகள் தேடி வரும்' என்று பொள்ளாச்சியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் பேசினார்.
வேலைவாய்ப்பு முகாம்
பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இதில் படித்த ஆண்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினருக்கு ரூ.4 கோடி கடனுதவிகளை வழங்கினார்.
இளைஞர்களின் கையில்...
இதையடுத்து கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:-
கோவை, வளர்ச்சி பெற்ற மாவட்டம் ஆகும். இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது இளைஞர்களின் கையில் தான் உள்ளது. ஒரு வேலையில் சேரும்போது சம்பளம் எவ்வளவு வாங்குகிறோம் என்பது முக்கியம் அல்ல. கடினமாக உழைத்து முதலாளிகளாக மாற வேண்டும். படிக்கும் போதே திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வாய்ப்புகள் தேடி வரும்
பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். இதற்காக புதுமைப்பெண், மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடினமாக உழைத்தால் மட்டுமே வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சப்-கலெக்டர் பிரியங்கா, வேலைவாய்ப்பு துறை மண்டல இயக்குனர் ஜோதி மணி, துணை இயக்குனர் கருணாகரன், தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வேலைவாய்ப்பு முகாமையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.