காங்கிரசை முடக்க நினைத்தால் அது நடக்காது : கே.எஸ்.அழகிரி
|காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சிதம்பரம்,
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
டெல்லியில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த போராட்டத்தை கலைப்பதற்காக டெல்லி போலீசார் 3 ஆயிரம் கண்ணீர் புகை குண்டுகளை விவசாயிகள் மீது வீசுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காந்திய வழியில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மோடி அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. உடனடியாக கணக்கு காட்டப்படவில்லை என கூறி முடக்கி இருக்கிறார்கள்.அதற்கு விளக்கம்தான் கேட்க வேண்டுமே தவிர முடக்கக் கூடாது. நாங்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை.
காலதாமதம் என்பது சரி செய்யக் கூடியது. அதற்காக ரூ.200 கோடி அபராதம் விதித்தால் எப்படி யார் போய் கட்டுவது? காங்கிரசை முடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அது நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.