< Back
மாநில செய்திகள்
`சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால்... - வெளியான எச்சரிக்கை
மாநில செய்திகள்

`'சண்டாளர்' என்ற சொல்லை பயன்படுத்தினால்...'' - வெளியான எச்சரிக்கை

தினத்தந்தி
|
15 July 2024 8:04 PM IST

'சண்டாளர்' என்கிற சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, அரசியல் மேடைகளிலோ, நகைச்சுவையாகவோ 'சண்டாளர்' என்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளைச் செய்கின்ற சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளிலும், திரைப்படப் பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.

இது, அப்பெயர்களிலுள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும். தவிர இது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொதுச் சமூகத்தில் இல்லை. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 இன்படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர் தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48 -ம் இடத்தில் உள்ளது என்பதையும் இவ்வாணையம் சுட்டிக்காட்டுகிறது.

அண்மைக் காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாகப் பேசப்படுவதைக் காணமுடிகிறது. எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்