'ஒருவரை சூழ்ச்சியில் வீழ்த்தினீர்கள் என்றால், நீங்களும் சூழ்ச்சியில் வீழ்த்தப்படுவீர்கள்' - ஓபிஎஸ் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
|'ஒருவரை சூழ்ச்சியில் வீழ்த்தினீர்கள் என்றால், நீங்களும் சூழ்ச்சியில் வீழ்த்தப்படுவீர்கள்' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த திருநாளை "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" என்றும் "கோகுலாஷ்டமி" என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் எனது இனிய "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாபாரதப் போரின்போது அர்ஜூனனிடம் பகவான் கிருஷ்ணர் உணர்த்திய தர்மங்கள்தான் பகவத்கீதை என்னும் புனித நூல் ஆகும். "ஒருவரை சூழ்ச்சியில் வீழ்த்தினீர்கள் என்றால், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்களும் சூழ்ச்சியில் வீழ்த்தப்படுவீர்கள்", "ஒருவரின் நம்பிக்கையை பெறுவதென்பது எளிதானதல்ல, அவ்வாறு பெற்ற நம்பிக்கையை எந்தச் சூழலிலும் கெடாமல் பார்த்துக் கொள், என்றும் நம்பிக்கையுடையவனாய் இரு", "சிந்தனையில் வஞ்சம் புகுந்தால் நெஞ்சமது நிம்மதியை இழக்கும், சிந்தித்து செயலாற்றுங்கள்", "ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை" என பல வாழ்க்கை நெறிமுறைகளை "பகவத் கீதை" என்னும் புனித நூல் உலகிற்கு எடுத்துரைத்து இருக்கிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததன் நோக்கமே இந்த உலகத்தில் உள்ள தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். இந்த நன்னாளில், நாம் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி தீமைகளை முறியடிக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும்; நாடெங்கும் தர்மம் தழைக்க வேண்டும்; "அமைதி, வளம், வளர்ச்சி" பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.