பெரம்பலூர்
ஆண்டாளின் குறிக்கோளை கடைபிடித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்-நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு
|ஆண்டாளின் குறிக்கோளை மாணவிகள் கடைபிடித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என பெரம்பலூரில் நடந்த கல்லூரி விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கூறினார்.
திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள்
பெரம்பலூரில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் அங்கமான ராமகிருஷ்ணா ஆன்மிக மற்றும் பண்பாட்டு அகடாமி சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது.
விழாவுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் நிறுவனத்தலைவர் ம.சிவசுப்ரமணியம் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடக்க உரையாற்றினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி முன்னிலை வகித்தார்.
பரிசளிப்பு
விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பாவை போட்டிகளில் வெற்றி பெற்ற 57 மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகளையும், பெரம்பலூர் பஸ் அதிபர் உமாராமலிங்கத்தின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு அருட்செல்வர் பட்டத்தையும் வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் இல.கணேசன் பேசும்போது கூறியதாவது:-
பாவை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகள், பரிசு பெற்றது மட்டுமல்லாமல், ஆண்டாள் தனது பாசுரங்களில் கூறிய பண்பை தங்களது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். மானுட பிறவிக்கு வாழ்க்கை படமாட்டேன், இறைவனையே அடைந்தே தீருவேன் என்று கொள்கை பற்றோடு ஆண்டாள் வாழ்ந்தாள். இறைவனின் அடியை அடைந்தாள்.
சந்திரயான்-3
ஆண்டாளின் குறிக்கோளை போல் ஒவ்வொரு மாணவியும் தமது குறிக்கோளாக கொண்டு நோன்பாக கடைபிடித்தால், நல்ல கணவர் அமைவதுடன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம். நாம் சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். அடுத்து சூரிய மண்டலத்தை நோக்கி விண்கலத்தை அனுப்பி உள்ளோம்.
நம் முன்னோர்கள் எவ்வித கருவிகளும் இருந்திராத காலத்தில் வானியலை நன்றாக கணித்து நமக்கு கொடையாக தந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த பூமியில் நமக்கு ஓர் ஆண்டு என்பது, தேவர்கள், ரிஷிகளுக்கு ஒருநாள் போன்றதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு பூஜை
இதையடுத்து, ஸ்ரீராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீசாரதா கல்விக்குழுமத்தின் கல்லூரி முதல்வர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் நிகழ்ச்சியில் ஸ்ரீஆண்டாள் மற்றும் மாணிக்கவாசகர் போன்று அலங்காரத்துடன் மேடைக்கு வந்த மாணவிகளுக்கும் நாகாலாந்து கவர்னர் சால்வை அணிவித்து பாராட்டினார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள வித்யாகணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இல.கணேசனுக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டது. விழா நிறைவடைந்தவுடன், மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் இல.கணேசனுக்கு தமிழக போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக கல்வி நிறுவன செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். முடிவில் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி முதல்வர் சுபலட்சுமி நன்றி கூறினார்.