கடலூர்
திட்டமிட்டு செயல்பட்டால் மன அழுத்தம் ஏற்படாது
|திட்டமிட்டு செயல்பட்டால் மன அழுத்தம் ஏற்படாது என்று போலீசாருக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை கூறினார்.
கடலூர் உட்கோட்ட போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நேற்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்தது. பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசுகையில், போலீசாருக்கான மன உளைச்சலை கண்டறிந்து, அதை சரி செய்வதற்கான பயிற்சியாக இது இருக்கும்.
ஆகவே எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். அப்போது தான் நமக்கு மன அழுத்தம் இருக்காது. எண்ணத்தை தெளிந்த நீரோடை போல் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் வாழ்க்கை எளிமையாக இருக்கும். இனிமையாகவும் இருக்கும். நல்ல விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டும்.
மன அழுத்தம்
ஒரு செயலை செய்யும் போது, அந்த செயலில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மற்ற விஷயங்களை சிந்தித்தால் மன அழுத்தம் தான் ஏற்படும். ஆகவே எண்ணத்தை, மனதை ஒரு நிலைப்படுத்தி நிதானமாக செயல்படுங்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும் நமது எண்ணங்கள் தான் காரணம். வேறு யாரும் காரணம் கிடையாது என்பதை உணருங்கள் என்றார். பயிற்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியை தனியார் அமைப்பை சேர்ந்த மனோகரன் அளித்தார். இதில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் கடலூர் உட்கோட்ட போலீசார் கலந்து கொண்டனர்.