< Back
மாநில செய்திகள்
இடவசதி, குறைந்த பண முதலீடு இருந்தால்... நர்சரி கார்டன் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்
சென்னை
மாநில செய்திகள்

இடவசதி, குறைந்த பண முதலீடு இருந்தால்... நர்சரி கார்டன் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்

தினத்தந்தி
|
23 March 2023 8:01 AM GMT

வேளாண்மை தொழிலில் ‘நர்சரி கார்டன்' எனப்படும் செடி, கொடி, மரக்கன்றுகள் வளர்ப்பு நாற்றுப்பண்ணை தோட்டத் தொழிலும் ஒரு அங்கமாக இருக்கிறது. காய்கறி, பழச்செடிகள், பூச்செடிகள், மூலிகை மற்றும் வாசனை செடிகள், மரக்கன்றுகள் நர்சரி கார்டன்களில் பராமரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் இயங்கி வரும் 76 அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இந்த நடவுச்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விவசாயிகள், நர்சரி கார்டன் தொழிலை நடத்தும் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் இந்த செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு 37.28 கோடி நடவுச்செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்பட்டன.

தற்போது வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் செடி, கொடி, மரக்கன்றுகள் வளர்ப்பு ஆர்வம் மக்களிடையே பெருகி உள்ளது. புதிதாக வீடு கட்டுவோர்கள் வீட்டின் வெளிப்புற வளாகம், ஜன்னல், வராண்டா, படிக்கட்டு, சுற்றுச்சுவர்களில் அழகிய செடிகளை வைத்து அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

உயிருள்ள பொருளான மரக்கன்று, செடி, கொடிகள் கண்களுக்கு விருந்தாகவும், மன கவலையை போக்கும் மருந்தாகவும் இருப்பதால் இவற்றின் மவுசு அபரிமிதமாக பெருகி உள்ளது. மக்களிடையே செடி வளர்ப்பு மோகம் அதிகரித்து உள்ளதால் நர்சரி கார்டன் தொழில் செழிப்படைந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு 40.9 கோடி நடவுச்செடிகளை உற்பத்தி செய்து விற்க வேண்டும் என்பது அரசு தோட்டக்கலைத்துறையின் இலக்காக இருக்கிறது. இவ்வாறு அரசு தோட்டக்கலைத்துறை பண்ணைகள் மூலமாக நர்சரி கார்டன்களுக்கு செடிகள் சப்ளை செய்யப்பட்டாலும், தனியார் நர்சரி பண்ணைகள் இந்த தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

நர்சரி கார்டனில் தக்காளி, வெண்டைக்காய், கத்திரிகாய் போன்ற காய்கறி செடிகள், மா, பலா, வாழை, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, சீத்தா, பப்பாளி, நாவல், சப்போட்டா போன்ற பழக்கன்று செடிகள், ரோஜா, செம்பருத்தி, மினிநந்தி, நந்தியாவட்டை, கருவேப்பிலை, காகிதப்பூ, குத்துமல்லி, குண்டுமல்லி, அடுக்குமல்லி, சாதிப்பூ, நித்தியமுல்லை, குரோட்டன்ஸ், அரளி, தங்க அரளி, மருதாணி, சிறியாநங்கை, பெரியாநங்கை, மணிப்ளான்ட் போன்ற வகையிலான பூச்செடிகள், துளசி, நெல்லி, தூதுவளை, கற்றாழை உள்பட மூலிகை மற்றும் வாசனை செடிகள், தென்னை, மூங்கில், விளாமரம், நீர்மருது, பூவரசு, இலுப்பை, நாரத்தை, அசோகா போன்ற பெரிய மரக்கன்றுகள் என 500 வகையிலான செடி, கொடி, மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

நல்ல இட வசதி, குறைந்த பண முதலீடு இருந்தால் போதும் இந்த தொழிலில் கால்தடம் பதித்து சாதிக்கலாம் என்பது நர்சரி தொழிலில் உள்ளவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

நசரத்பேட்டையில் நர்சரி கார்டன் பண்ணை நடத்தி வரும் சுதாகர் கூறியதாவது:-

நான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆரம்ப காலக்கட்டத்தில் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்கள் போன்ற இடங்களில் மட்டும் இது போன்ற செடி, கொடி, மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டன.

தற்போது இயற்கையை போற்ற வேண்டும். பசுமையை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மனதில் பதிந்துள்ளது. இன்றைக்கு சிறிய வீடுகளில் கூட தண்ணீர் பாட்டில் போன்றவைகளில் செடிகள் வளர்க்க தொடங்கி உள்ளனர்.

இதனால் நர்சரி கார்டன் தொழில் வளமான நிலையில் இருக்கிறது. அரசு பண்ணைகளில் இந்த நடவுச்செடிகள் விற்பனை செய்யப்பட்டாலும் பூச்செடிகளில் பல வகைகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், பழக்கன்றுகள் ஆந்திராவில் இருந்தும், வாசனை செடிகள் மராட்டிய மாநிலம் புனேயில் இருந்தும் அதிகளவில் இறக்குமதியாகின்றன.

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் சுற்றுப்புறத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. எனவே அவர்களிடம் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் வருகின்றன.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் செடி வகைகளை அவர்கள் சொல்லும் இடத்துக்கு டெலிவரி செய்து வருகிறோம். செடி வாடி போகாமல் வளர்ப்பது எப்படி? என்பது பற்றியும் தெளிவான விளக்கங்கள், ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு பெரியளவில் முதலீடு தேவையில்லை. நல்ல இட வசதியும், அந்த இடத்தின் அளவுக்கு ஏற்ப மரக்கன்று, செடி, கொடிகள் வாங்குவதற்கு குறைந்த அளவில் பணம் இருந்தால் போதும். இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செடி வளர்ப்பு ஆர்வலர் சுதீஷ்:-

சிறுவயதில் இருந்தே எனக்கு செடிகள் மீது ஈர்ப்பு, ஆர்வம் அதிகம் உண்டு. வளர்ந்த பின்னர் செடி வளர்ப்பில் தீவிரமடைந்தேன். எனது வீட்டில் பலவிதமான செடி, கொடிகளை வளர்த்து வருகிறேன்.

காலையில் எழுந்தவுடன் செடி, கொடிகளை பார்த்தால் மனதுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. சில நேரங்களில் ஏற்படும் சூழ்நிலைகளால் கவலைகள் சூழும்போது இந்த செடி, கொடிகளை பார்க்கும் போது ஆறுதலாக அமைகிறது.

புதிதாக வாங்கிய பூச்செடிகளில் பூக்கள் பூக்கும் போது மனதில் இன்பம் பொங்குகிறது. செடி வளர்ப்பில் உள்ள உணர்வுப்பூர்வமான அம்சங்களை எனது நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களை ஊக்குவித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன் உதாரணமாக திகழும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தங்கி இருக்கும் நாட்களில் அதிகாலை மற்றும் மாலை வேளையில் மூலிகை செடிகள் நிறைந்து இயற்கை எழில் ததும்பும் அடையார் தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.

அதே போன்று அவர், தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், சினிமா மற்றும் முக்கிய பிரமுகர்களின் இல்ல திருமண விழாக்களில் கலந்துகொள்ளும் போது மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடையை பரிசாக வழங்கி வாழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதில், 'மரத்தை நாம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும்' என்ற கருணாநிதியின் பொன்மொழி அடங்கிய அட்டையையும் இணைத்து வழங்குகிறார்.

சமீபத்தில் அவரது 70-வது பிறந்தநாளில் வாழ்த்துவதற்கு அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த அனைவரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செடி, கொடி, மரக்கன்றுகள் மீது இருக்கும் ஈர்ப்பையும், இயற்கையை பேணி காக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ளது.

செடி வாடி வதங்காமல் வளர்ப்பது எப்படி?

அழகிய செடிகளை வாங்கி வைத்துவிட்டால் மட்டும் போதாது அதனை அன்றாடம் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அவைகள் வாடி வதங்கி பட்டு போய்விடும். எனவே தினந்தோறும் தவறாமல் செடி வளரும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்ற வேண்டும்.

நல்ல காற்றோட்டமும், லேசான சூரிய ஒளி தாக்கமும் இருக்க வேண்டும். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால்சூரிய செடிகள் வாடுவது போன்று இருந்தாலும் தேவைக்கு ஏற்ப காலை மற்றும் மாலை வேளையில் தண்ணீர் ஊற்றினால் செழிப்படையும். பூச்சுகளுக்கு செடிகள் இரையாகாமல் இருப்பதற்கு 25 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். செடிகளில் வளரும் பூக்கள், காய்கறிகளை மென்மையாக பறிக்க வேண்டும். இதில் கடினப் போக்கை கடைபிடிக்க கூடாது.

செடிகளை நோய்கள் தாக்கினால் அந்த இலைகளை உடனடியாக வெட்டி அகற்றிட வேண்டும். அதே போன்று பூந்தொட்டிகளில் விரிசலோ, சேதமோ ஏற்பட்டால் கையோடு அதனை மாற்றி விட வேண்டும் என்பது நர்சரி கார்டன் பராமரிப்பாளர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரையாக இருக்கிறது.

சுப நிகழ்ச்சிகளில் செடி, மரக்கன்றுகளுக்கு மவுசு

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வருகை தருபவர்களுக்கு மஞ்சள் பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போட்டு தருவது வழக்கம். சிலர் தங்கள் வசதிக்கு ஏற்ப தரமான பையில் பரிசு பொருட்கள் போட்டு வழங்கி வருகிறார்கள்.

ஆனால் சமீப காலமாக சுப நிகழ்ச்சிகளில் செடி, மரக்கன்றுகள் வழங்கும் பழக்கம் மேலோங்கி உள்ளது. இந்த செடி வகைகள், மரக்கன்றுகளை பலர் வாங்கி விரயம் செய்தாலும் சிலர் வீட்டில் வளர்த்து பராமரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்