< Back
மாநில செய்திகள்
கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால்... ஆண் குழந்தை பிறக்கும்- அமைச்சர் காந்தி பேச்சு வலைதளங்களில் வைரல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

'கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால்... ஆண் குழந்தை பிறக்கும்'- அமைச்சர் காந்தி பேச்சு வலைதளங்களில் வைரல்

தினத்தந்தி
|
10 Sept 2024 12:25 AM IST

அதிக புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பெண் பிள்ளைகள் பிறக்கும் என்று அமைச்சர் காந்தி பேசியது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராணிப்பேட்டை,

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், 'மாணவ - மாணவிகள் அரசுக் கொடுக்கிற மகத்தான திட்டங்களைப் பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. அரசு மூலமாக நிறைய உதவிகள் கிடைக்கிறது. ஒண்ணே ஒண்ணுதான். பெற்றோர்களை மட்டும் மறக்காதீங்க. அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களைப் படிக்க வைக்கிறாங்க தெரியுமா? அதுமட்டுமல்ல. நான், அடிக்கடி இன்னொன்னையும் சொல்லுவேன். போன ஜென்மத்தில் `பாவம்' பண்ணியிருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே பிறப்பார்கள். புண்ணியம் பண்ணியிருந்தால்தான் பெண் குழந்தைகள் பிறப்பார்கள்.

பெண்ணுக்குத்தான் தாய், தந்தையைப் பற்றித் தெரியும். என் பொண்ணு, என்னைப் பார்ப்பவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் கொடுக்கிறார். எனக்கே தெரியாது. நான் தும்பினால்கூட மருந்து வந்துவிடுகிறது. வீட்டில் இருக்கிற பசங்க கூட என்னென்னு கேட்க மாட்டாங்க. நான் பொதுவாக சொல்றேன். இதுதான் இயல்பு. நம்ம பெண்கள் காட்டுகிற பாசம் மாதிரியே நாமலும் பாசம் காட்டினால், குடும்பம் மட்டும் இல்லீங்க இந்த நாடே நல்லாயிருக்கும்' என்று கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மறுஜென்மம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அமைச்சர் ஆர்.காந்தியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சர் பேசிய நிகழ்ச்சி, கடந்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சி என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்