ராமநாதபுரம்
பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தால் பறிமுதல் செய்யப்படும்-மாணவர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
|பள்ளிக்கூடத்திற்கு மாணவ-மாணவிகள் மோட்டார் சைக்கிளில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
பள்ளிக்கூடத்திற்கு மாணவ-மாணவிகள் மோட்டார் சைக்கிளில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கி கூறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகம்மது முன்னிலை வகித்தார். வாகன ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகம்மது பேசியதாவது:- தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிகமானவர்களை ஏற்றி வரக்கூடாது. அனுமதி பெற்ற பள்ளி வாகனத்தில் மட்டும்தான் வருகின்றனரா என கண்காணிக்க வேண்டும். பள்ளியில் செயல்பட்டு வரும் சாலை பாதுகாப்பு குழுவின் மூலம் உடற்கல்வி ஆசிரியரை வைத்து மாணவ,மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ேமாட்டார் சைக்கிளில்...
பள்ளி வாகனங்களில், பஸ்களில் தொங்கியபடி, வரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனங்களை 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது என்பதை கட்டாயம் டிரைவர்கள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் கிடையாது என்பதால் பள்ளி மாணவ,மாணவிகள் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்க கூடாது. அவ்வாறு வந்தால் பெற்றோர்களிடம் தெரிவித்து தடுக்க வேண்டும். அதனை மீறி வந்தால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யலாம்.
பள்ளி வாகனங்களின் உட்பகுதியில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இருக்கைகளுக்கு மேல் மாணவ மாணவிகளை எக்காரணம் கொண்டும் ஏற்றி செல்வதை அனுமதிக்க கூடாது. இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்கள் சாலை விதிகள் குறித்தும் பள்ளி வாகனங்களின் விதிகள் குறித்தும் சந்தேகங்களை கேட்டறிந்து பயன்அடைந்தனர்.