கலப்பு திருமணம் செய்தால் வெட்டிக்கொல்வோம்... சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டது குறித்து வழக்கு - ஐகோர்ட்டு உத்தரவு
|இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சாதி கலப்பு திருமணம் செய்தால் வெட்டிக்கொல்வோம் என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் வேந்தன் தாக்கல் செய்த மனுவில், மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர், முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் கலப்புத் திருமணம் செய்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்து, பல்வேறு வீடியோக்களை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் புகார் தீவிர குற்றமாக பார்க்கப்படுவதாகவும், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.