"இந்த திட்டத்தை நிறைவேற்றினால் 50 அடியில் உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்" - பாமக தலைவர் அன்புமணி
|அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுத்து செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நடை பயணத்தை தொடங்கினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுத்து செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) தனது நடை பயணத்தை தொடங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் சோழர் கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுத்து அதனை செயல்படுத்த வலியுறுத்தி இன்றும் நாளையும் அரியலூர் மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொள்வதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று(சனிக்கிழமை) காலை 10:30 மணி அளவில் கீழப்பழுவூரில் அவர் தனது நடை பயணத்தை தொடங்கினார்.
சோழர்கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் வளர்ச்சி அடையும். மேலும் பல பகுதிகள் இயற்கை சுற்றுலா மையங்களாக மாறும் வாய்ப்பு ஏற்படும். அதனால் வேலை வாய்ப்புகளும் பெருகும். ஆகவே பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் அரியலூரில் சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நடைபயணம் கரை வெட்டிஏரி, கண்டராதித்தம், திருமானூர், காமராசவல்லி, குருவாடி, வைப்பூர், பூத்தூர்,விக்கிரமங்கலம் உள்ளிட்ட ஊர்கள் வழியாக தாபலூரில் நிறைவடைகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) அரியலூரில் தொடங்கும் நடைபயணம் வாலாஜா நகரம், அஸ்தினாபுரம், வி.கைகாட்டி,தத்தனூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், மீன்சுருட்டி கண்டமங்கலம் வழியாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நிறைவு பெறுகிறது.
பின்னர் கள ஆய்வு அறிக்கைகளை அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்க திட்டமிட்டுள்ளார்.