< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 விடை குறிப்பில் ஆட்சேபனை இருப்பின் நாளைக்குள் தெரிவிக்கலாம்..!
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 விடை குறிப்பில் ஆட்சேபனை இருப்பின் நாளைக்குள் தெரிவிக்கலாம்..!

தினத்தந்தி
|
30 Oct 2022 6:49 AM IST

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 விடை குறிப்பில் ஆட்சேபனை இருப்பின் நாளைக்குள் தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கான கணினி வழித்தேர்வுகள் கடந்த 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை காலை, மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in-ல்வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தேர்வர்கள் இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும்போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 28-ந்தேதி (நேற்றுமுன்தினம்) பிற்பகல் முதல் 31-ந்தேதி (நாளை) பிற்பகல் 5.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும், பாட வல்லுனர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்