திண்டுக்கல்
சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம்; விக்கிரமராஜா பேட்டி
|தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் 19-வது பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் முகமது கனி, செயலாளர் நஜிர்சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலம் தழுவிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடத்துவது போல, மாநில வணிகர் சங்க பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தி ஜி.எஸ்.டி.யில் உள்ள குளறுபடிகளை தீர்க்கும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வணிகர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
வணிகர்களுக்கான உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும். இதுமட்டுமின்றி வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரத்தை கணக்கிட்டு (பீக் அவர்ஸ்) கூடுதல் கட்டணம் வசூலிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ேளாம்.
தொடர் போராட்டம்
மத்திய அரசு கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்திருப்பதை எங்களால் ஏற்க முடியாது. கியாஸ் சிலிண்டர் விலையை கணிசமாக குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கும், வணிகர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த விலையை குறைந்தால் தான் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மத்திய அரசு உடனடியாக சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் பல மாவட்டங்களில் குளறுபடிகள் உள்ளது. இதனை சரிசெய்து முறையாக உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்க வேண்டும், திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கி விரைவில் திட்டத்தை முடிக்க வேண்டும் என்பன உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.