< Back
மாநில செய்திகள்
நடப்படும் மரக்கன்றுகளை பராமரித்தால்: 3 ஆண்டுகளில் கரூரின் வெப்பநிலையை மாற்றி விடலாம்
கரூர்
மாநில செய்திகள்

நடப்படும் மரக்கன்றுகளை பராமரித்தால்: 3 ஆண்டுகளில் கரூரின் வெப்பநிலையை மாற்றி விடலாம்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:08 AM IST

நடப்படும் மரக்கன்றுகளை பராமரித்தால் 3 ஆண்டுகளில் கரூரின் வெப்பநிலையை மாற்றி விடலாம் என மாவட்ட வன அலுவலர் சரவணன் தெரிவித்தார்.

மாநாடு

சென்னையில் சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட வன அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட வன அலுவலர் வி.ஏ.சரவணன் கலந்து கொண்டார். அவரிடம் மாநாட்டில் முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்துகள் குறித்து தினத்தந்திக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

9 லட்சம் மரக்கன்றுகளுக்கு இலக்கு

கேள்வி:- மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் கூறியது என்ன?

பதில்:- மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் காடுபரப்பளவு 23.5 சதவீதமாக இருக்கிறது. இந்த பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காடுகளின் பரப்பளவை கூட்டுவதற்கு அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். என்றார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எவ்வளவு மரக்கன்றுகள் நடவேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 9 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டும் அதே அளவான 9 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் வனத்துறை மட்டுமில்லாமல் மற்ற அனைத்து துறைகளையும் சேர்த்து மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் முதல்-அமைச்சரின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக பசுமை தமிழ்நாடு திட்டத்தின் இலக்கை செய்து முடிக்க வேண்டும்.

முயற்சி செய்கிறோம்

கேள்வி:- மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவு எவ்வளவு?

பதில்: கரூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 90 ஆயிரம் எக்டேர். இதில் 6 ஆயிரத்து 200 எக்டேர் தான் காடுகள் பரப்பளவு. 2.32 சதவீதம் தான் காடுகள் பரப்பளவு இருக்கிறது. ஆனால் மரங்களின் பரப்பளவு 4 சதவீதம் உள்ளது. இதில் தனியார் நிலங்களில் உள்ள மரங்களையும் சேர்த்து 4 சதவீதம் பரப்பளவு இருக்கிறது.

முதல்-அமைச்சரின் திட்டம் என்னவென்றால், தமிழகத்தில் 33 சதவீதம் வன பரப்பளவு இருப்பதுபோல், அந்தந்த மாவட்டத்திலும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது கரூர் மாவட்டம் 4 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்த வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் வன பரப்பளவு குறைவாக இருக்கிறதோ, அந்தந்த மாவட்டங்களில் அதிகப்படியான மரக்கன்றுகளை நட வேண்டும் என கூறியுள்ளனர். அதற்குதான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

தண்ணீர் ஊற்றுவதில் பிரச்சினை

கேள்வி: கரூரில் வன பரப்பளவு எதனால் குறைந்துள்ளது?

பதில்: தமிழ்நாட்டின் மொத்த மழையளவு சராசரியாக 900 மில்லி மீட்டர் முதல் 1000 மில்லி மீட்டர் வரை. ஆனால் கரூர் மாவட்டத்தின் மழையளவு சராசரி என்பது 650 மில்லி மீட்டராக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்றுதான் இருக்கிறது. கிட்டதட்ட 300 மில்லி மீட்டர் குறைந்து மழை பொழிகிறது. 300 மில்லிமீட்டர் மழையளவு குறையும்போது, மரங்கள் நடும்போது அதனை பராமரிக்க தண்ணீர் ஊற்றும் பிரச்சினைகள் அதிகளவில் ஏற்படுகிறது.

மழையளவு குறைவுதான் கரூர் மாவட்டத்தின் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்தபோது அவரது நிதியில் இருந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு 2 வாகனங்கள் வாங்கி கொடுத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். இதுபோன்ற பசுமை வளாகம் தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கலெக்டர் வளாகத்திலும் இல்லை. முதன்முறையாக கரூரில் செய்துள்ளோம். அதனை பராமரிப்பதற்கு கலெக்டர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

தனியார் நிறுவனங்கள் உதவலாம்

கேள்வி:- மரங்கள் வளர்ப்பதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது?

பதில்:- தற்போது காப்பு காடுகளில் 90 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதில் 60 முதல் 70 சதவீதம் வரை முடிக்கப்பட்டுள்ளது. கடவூர், வையம்மலைப்பாளையம் ஆகிய காப்பு காடுகளில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் மற்ற மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் நபார்டு திட்டத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் தனியார் விவசாய நிலங்களில் நடுவதற்கு 2 லட்சத்து 9 ஆயிரம் மரக்கன்றுகள் தயாராக உள்ளது. இதில் 1 லட்சத்து 95 ஆயிரம் விவசாய நிலங்களுக்கும், மாநகராட்சி பகுதியில் 14 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது. இதில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் தான் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் கரூர் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நட தயாராக உள்ளோம். சாலைகளில் மரம் வைப்பது என்பது ஒவ்வொரு துறையிலும் செய்துவருகிறார்கள். இந்தாண்டு வனத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் செய்து வருகிறோம். சாலைகளில் மரங்கள் நடுவது பிரச்சினை இல்லை. பராமரிப்பதுதான் பிரச்சினை. வனத்துறையை பொறுத்தவரை நான்றுகளை உருவாக்கி நாட்டு வைப்பதற்கு அரசு நிதி வழங்குகிறது. அதன்பிறகு பராமரிப்பு, வேலி அமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் போன்றவற்றிற்கு நிதி கிடைக்காது.

இதனால் மற்ற துறைகள், தனியார் அமைப்புகள் செய்தல் நன்றாக இருக்கும். மரங்களை பாதுகாப்பதற்கு தனியார் அமைப்புகளுக்கு பெரியளவில் உதவி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். கரூருக்கு 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தயாராக உள்ளோம். அதற்கு வேலி வைத்து, தண்ணீர் ஊற்றி பராமரித்தால் போதும். இதற்கென்று கரூரில் ஒரு அமைப்பு உருவாக்கி நிதி அளித்து பராமரித்தால் 2 அல்லது 3 ஆண்டுகளில் கரூரின் வெப்பநிலையை மாற்றிவிடலாம். இதற்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள் முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் தான் 33 சதவீதத்திற்கு மேல் மர பரப்பளவு உள்ளது. தமிழகத்தில் வன பரப்பளவு குறைவாக உள்ள மாவட்டத்தில் கரூர் மாவட்டம் 2-வது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் 2-வது இடம்

கேள்வி:- கரூர் மாவட்டத்தில் உள்ள மரக்கன்றுகள்?

பதில்:-தனியார் விவசாய நிலத்திற்கு நடுவதற்கு தேக்கு, மகாகனி, வேம்பு, மலைவேம்பு, செம்மரம், பூவரசம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்த்து கொடுத்துள்ளோம். பொதுஇடத்தில் நடுவதற்கு வேம்பு, புங்கன், செண்பகம், மகிலம், நாகலிங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடுகிறோம். வன பரப்பில் நடுவதற்கு 30 வகையான மரங்களும் நடுகின்றோம். தற்போது தரகம்பட்டி, பேரூர், நல்லமுத்தாம்பாளையம் ஆகிய 3 இடங்களில் மரகத பூஞ்சோலை அமைத்துள்ளோம்.

இதில் தரகம்பட்டியில் உள்ள பூஞ்சோலையில் ராசி, நட்சத்திரம், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் என ஒவ்வொரு பாதத்திற்கும் ஒவ்வொரு மரம் இருக்கிறது. கிட்டதட்ட 144 மரக்கன்றுகள் உருவாக்கியுள்ளோம். இதுபோன்று உருவாக்குவது தமிழ்நாட்டில் 2-வது இடத்தில் கரூர் மாவட்டம் உள்ளது. பேரூரில் மூலிகை மரங்கள், மூலிகை தாவரங்கள், மூலிகை செடிகள் என 300 வகையான மரக்கன்றுகள் உருவாக்கியுள்ளோம். நல்லமுத்தாம்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட அனைத்து வகையான மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்