முகக்கவசம் அணியாவிட்டால்... "இன்னைக்கு அறிவுரை நாளைக்கு அபராதம்" - காவல்துறை அறிவிப்பு
|இன்று முதல் நாள் என்பதால், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல் துறையினர் முகக்கவசம் வழங்கி அறிவுறை கூறி வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இதில் உருமாறிய கொரோனா தற்போது 8 வகையாக பரவி வருகிறது. குறிப்பாக பி.ஏ.5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் கானப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தின் நகர் பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தொற்றை கட்டுப்படுத்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவேண்டிய அவசியம் நிலவுகிறது.
ஏற்கெனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காத நிலையில், அதனை தீவிரப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் முகக்கவசம் அணிதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழக பொது சுகாதார துறை சட்டம் 1939-ன் படி இந்த அபராதம் விதிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்ட எஸ்.பி. சசிமோகன் தலைமையிலான குழு நகரின் முக்கிய பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வருபர்களுக்கு காவல்துறையினர் அறிவுறை கூறுகின்றனர்.
இது குறித்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் கூறும்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இன்று முதல் நாள் என்பதால், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி முகக்கவசம் வழங்கி அறிவுறை கூறுகிறோம். நாளையும் மக்கள் இது போன்று முகக்கவசம் அணியாமல் வந்தால், கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.