வேதங்களை சொல்லிக்கொடுக்கும் வேலையில் கவர்னர் ஈடுபடுவாரேயானால் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திடும் - கி.வீரமணி
|வேதங்களை சொல்லிக்கொடுக்கும் வேலையில் கவர்னர் ஈடுபடுவாரேயானால் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திடும் என கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு, தமிழ்நாடு கவர்னர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "குஜராத்தை சேர்ந்த ''வேதிக் மிஷன் டிரஸ்ட் என்ற தனியார் அமைப்பால் 'சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு' என்ற தலைப்பில், மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் வருகிற 11-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்'' என்று கட்டாயப்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, 'திராவிட மாடல்' சீரும், சிறப்புமாக நடந்துகொண்டிருக்கும்போது, கவர்னர் போட்டி அரசை நடத்துகிறாரா? அந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தவர்கள் யார்? நாட்டில் நடப்பது கவர்னர் அரசா? மக்கள் அரசா? இதன் நோக்கங்கள் என்ன என்பதை கவர்னர் அறிவிப்பாரா? வேதங்களை சொல்லிக்கொடுக்கும் வேலையில் கவர்னர் ஈடுபடுவாரேயானால், மிகப்பெரிய மாணவர் கிளர்ச்சிக்கும், மக்கள் கிளர்ச்சிக்கும் வித்திடும். தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித்துறை இதில் அவசர அவசரமாக தலையிட்டு, கவர்னரின் சுற்றறிக்கையை செயல்படுத்தக்கூடாது என்று அறிவிக்கவேண்டும். உடனடியாக சுற்றறிக்கை வெளியிட்டு தடுப்பது அவசரம், அவசியம் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.