< Back
மாநில செய்திகள்
இலவச லேப்டாப் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அதை வழங்கலாமே - சென்னை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

இலவச லேப்டாப் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அதை வழங்கலாமே - சென்னை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
12 Oct 2022 2:23 PM GMT

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' கேட்கும் வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், "தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இலவச லேப்டாப் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அதை வழங்கலாமே என்று கருத்து கூறினர்.

பின்னர், இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்