மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து அ.தி.மு.க. போராட்டம் - எடப்பாடி பழனிசாமி
|மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி பிரச்சினையில்...
காவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டத்தில் ஆண்டுதோறும் நமக்கு உண்டான பங்கினை இதுநாள் வரை பெற்று வந்தோம். ஆனால் இந்த தி.மு.க. அரசினுடைய கூட்டாளி கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது முதல் மீண்டும் காவிரி நீர் விஷயத்தில் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது.
காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை அந்த அரசோடு வாதாடி, போராடி வாங்காமல் பிரதமருக்கும், மத்திய நீர்வளத் துறை மந்திரிக்கும் கடிதம் எழுதுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.
கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'தமிழகத்திற்குரிய நீரை காவிரியில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் உத்தரவிடப்படும்' என்று மத்திய மந்திரி உறுதி அளித்ததாக தெரிவித்தார். இந்தநிலையில் பிரதமருக்கு இதே பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரு கடிதம் எழுதி இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கடிதம் எழுதுவதின் மர்மம் என்ன?
காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அந்த கடமையில் இருந்து அரசியல் காரணங்களுக்காக நழுவும் அம்மாநில காங்கிரஸ் அரசை தட்டிக் கேட்க வேண்டியதும், கண்டிக்க வேண்டியதும், வற்புறுத்தி நம்முடைய பங்கு நீரைப் பெற வேண்டியதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரிமையும், பொறுப்புமாகும்.
எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சார்பில் மக்கள் நலனுக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் கேலியும், கிண்டலும் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் ஆனபின் எடுத்ததெற்கெல்லாம் பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுவதின் மர்மம் என்ன?
அ.தி.மு.க. போராட்டம்
கர்நாடக மாநில நீர்பாசனத்துறையும், துணை முதல்-மந்திரி சிவக்குமாரும் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்காக நில அளவீடு செய்ய ஆட்களை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக இந்த தி.மு.க. அரசு, கர்நாடக மாநில அரசு மேற்கொள்ளும் நில அளவைப் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்.
இதை செய்யாத பட்சத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் டெல்டா விவசாயிகளை ஒன்றிணைத்து தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.