பிரதமராக மோடி 3-வது முறையாக வந்தால், தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும் - அண்ணாமலை
|ஊழல்வாதிகளை அடியோடு துரத்த வேண்டும் என்ற நோக்கத்திலே மக்கள் உள்ளனர் என்று அண்ணாமலை கூறினார்.
திண்டிவனம்,
பா.ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு என் மண், என் மக்கள் பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று மாலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். இதற்காக திண்டவனம் சென்ற அவர் இந்திராகாந்தி பஸ் நிலையம் அருகில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நேரு வீதி வழியாக பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் காந்தி சிலை அருகில் பாதயாத்திரையை முடித்த அவர் திறந்தவேனில் நின்றவாறு மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மோடி 3-வது முறையாக பிரதமராக வந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் இருக்கும். இங்கு அரசியல் மாற்றம் தேவை என்று மக்கள் எண்ணுகிறார்கள். தமிழகத்தில் எல்லா இடத்திலும் மாற்றம் என்கிற வார்த்தையைத்தான் மக்கள் பேசி வருகிறார்கள். 70 ஆண்டுகால திராவிட ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஊழல்வாதிகளை அடியோடு துரத்த வேண்டும் என்ற நோக்கத்திலே மக்கள் உள்ளனர்.
அரசியல் மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கின்றனர். மக்களின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அண்ணாலை செஞ்சி சென்று அங்கு பாதயாத்திரை நடத்தினார்.