தஞ்சாவூர்
லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்
|தஞ்சை மாவட்டத்தில் திரையரங்குகளில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்படம்
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி வருகிற 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை (ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் 5 காட்சிகள்) நடத்திட அனைத்து திரையரங்குகளிலும் தொடக்கக்காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சியாக அதிகாலை 1.30 மணி அளவில் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் திரையரங்குகள் பின்வரும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூலித்தல் மற்றும் விதிமீறல்களை தடுக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
பாதுகாப்பு
திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் போது சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், போலீஸ்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான காலஇடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.
புகார் அளிக்கலாம்
தஞ்சை, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்ட திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் மற்றும் விதிமீறல்கள் ஏதுவும் இருப்பின் முறையே 9445000465, 9445000466 மற்றும் 9445000467 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்களது புகார் அளிக்கலாம் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.