மத்திய அரசின் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு செல்வேன்- ராதிகா சரத்குமார்
|நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க பாடுபடுவேன் என விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதிகா கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் மணிக்கூண்டு பகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ராதிகா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
காமராஜர் பிறந்த மண்ணில் பிரசாரம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு நாள் தீவிர அரசியலுக்கு வராமல் இருந்தேன். 100 சதவீதம் என்னால் நேரம் ஒதுக்க முடியும் என்ற நிலையில் தற்போது எனது கணவர் நாட்டாமைதான் உன்னால் முடியும் என நம்பிக்கை கொடுத்தார். நான் அந்த நம்பிக்கையில் என்னால் 100 சதவீதம் உங்களுக்காக பாடுபடுவேன். அதில் உறுதியாக இருக்கிறேன். உங்கள் சகோதரியாக, சித்தியாக உங்களுக்காக பாடுபடுவேன். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார். நானும் வெற்றி பெற்றால் உங்களுக்காக அவரிடம் சொல்லி உங்கள் குறைகளை போக்குவதற்கு பாடுபடுவேன். நான் இங்கு தான் பேராலி ரோட்டில் இருக்கிறேன். நான் இங்கிருந்து செயல்படுவேன். 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் எந்த மந்திரி மீது ஊழல் புகார் உள்ளதா? இங்கு மாநிலத்தில் அமைச்சர்கள் ஜெயிலுக்கும் போவதும் வருவதுமாக அம்மா வீட்டுக்கு போய்விட்டு வருவது போல் வருகிறார்கள்.
பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் அந்த திட்டங்கள் சில பேருக்கு தான் கிடைக்கிறது. சில பேருக்கு வரவில்லை. நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க பாடுபடுவேன். தாமரைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.