ஈ.பி.எஸ் வராமல் போனால் போகட்டும்; தொண்டர்கள் ஓ.பி.எஸ்-ஸை தேடி வருகிறார்கள் - வைத்திலிங்கம் பேட்டி
|ஈ.பி.எஸ் வராமல் போனால் போகட்டும்; தொண்டர்கள் ஓ.பி.எஸ்-ஸை தேடி வருகிறார்கள் என்று வைத்திலிங்கம் கூறினார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பொதுக்குழு கூட்டமே செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து மனக்கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியார்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். அவர் வெளியிட் கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சி அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்த வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர உள்ளனர். அதை நீங்கள் பார்க்க இருக்கத்தான் போகிறீர்கள்.
ஈபிஎஸ் பக்கம் இருந்த நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் வர தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி வராமல் போனால் போகட்டும், தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தேடி வருகிறார்கள். அதிமுகவை வலுப்படுத்துவதே நோக்கம்.
ஈபிஎஸ் -இன் முகம் நேற்று கொடூரமாக இருந்தது. அலுவலகத்தில் எந்த ஆவணங்கள் திருட்டு போயுள்ளது என அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.