பெரம்பலூர்
வணிக பெயர் பலகைகள் தமிழில் இல்லையென்றால் கருப்பு மை பூசி அழிப்போம்-டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை
|வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ் மொழி இல்லையென்றால் கருப்பு மை பூசி அழிப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு பரப்புரை பயணம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெரம்பலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழைத் தேடி என்கிற தலைப்பில் என்னுடைய விழிப்புணர்வு 8 நாள் பரப்புரை பயணம் சென்னையில் தொடங்கி சங்கம் வைத்து வளர்த்து தமிழை வளர்த்த மதுரையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
நான் உள்பட அனைவரும் வெட்கப்படவேண்டியது தமிழை தேடி என்கிற தலைப்பை பார்த்து தான். உலகில் இருக்கிற எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய தாய் மொழியை தொலைக்காமல் வளர்த்து வருகிறார்கள்.
அழிவின் விளிம்பில் தமிழ் மொழி
நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழி அழிவின் விளிம்பு நிலையில் இருக்கிறது. அழியாமல் தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எனது பயணத்திற்கு அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழை பயிற்று மொழியாக கொண்டு பாடங்கள் இருக்க வேண்டும். அனைவரும் தமிழ் மொழியில் உரையாட வேண்டும்.
வணிக நிறுவனங்களில் பெயர் விளம்பர பதாகையை 10 பகுதியாக பிரித்து அதில் 5 பகுதியில் தமிழ் மொழியிலும், 3 பகுதியில் ஆங்கில மொழியிலும், மீதமுள்ள 2 பகுதியில் வணிகர்கள் விரும்புகின்ற மொழியில் பெயரை எழுதி கொள்ளலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால் அதனை யாரும் பின்பற்றுவதில்லை.
கருப்பு மையை பூசி அழிப்போம்
ஒரு மாதம் நாங்கள் இடைவெளி தருகிறோம். அவ்வாறு சட்டத்தை மதிக்காமல் பின்பற்றாத வணிக நிறுவனங்களின் பெயர் விளம்பர பதாகையை நாங்கள் கருப்பு மையை பூசி அழிப்போம். அதற்கு தேவை ஏற்படாது என்று நினைக்கிறோம். ஏனென்றால் அரசு அதற்காக இருக்கிற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். வணிக சங்கங்களின் தலைவர்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுத இருக்கிறோம். இனி எதிர்காலத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் இருக்கும் என்று நம்புகிறோம்.
புற்றீசல், விஷ காளான்கள் போல் ஆங்காங்கே ஆங்கில வழிக்கல்வி என்ற பள்ளிக்கூடத்தை கல்வி வணிகமாக தொடங்கி அதிகம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த சட்டம் போட்டாலும் பின்பற்றுவதில்லை. அவர்கள் தமிழை அழிப்பதற்காக ஆங்கில வழி பள்ளிக்கூடத்தை நடத்துகிறார்கள். அதனை நாம் வேடிக்கை பார்க்கிறோம். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கட்சியை சேர்ந்த தம்பதியின் பெண் குழந்தைக்கு கலையரசி என்ற பெயரை ராமதாஸ் சூட்டினார். அப்போது கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் உலக.சாமிதுரை (பெரம்பலூர்), ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.