பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
|அ.தி.மு.கவில் உழைத்து பதவிக்கு வந்தேன் என்று எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். அதிக கப்பம் கட்டுபவரே அ.தி.மு.க.வில் தலைவராக முடியும் என்று மு.க. ஸ்டாலின் சாடினார்.
கடலூர்,
சிதம்பரம், மயிலாடுதுறை தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியா கூட்டணி மேல் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள திமுக சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக வழங்கியுள்ளது. பிரதமர் மோடிக்கு சமூக நீதி மீது அக்கறை இல்லை. மதச்சார்பின்மையை மருந்துக் கூட நினைப்பது இல்லை. சமத்துவத்திற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவை மோடிக்கு பிடிக்கவில்லை. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளி இந்தியாவாக மாற்ற மோடி துடிக்கிறார். இத்தகைய பிரதமர் நமக்கு தேவையா?
தி.மு.க.விற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பொய் பேசுகிறார். அ.தி.மு.க.வில் உழைத்து உயர்ந்தேன் என பொய் சொல்கிறார். சிலர் முதுகிலே சவாரி செய்து பதவி வாங்கி அவர்களுக்கே துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதிகமாக கப்பம் கட்டுபவரே அ.தி.மு.க.வில் தலைவராக இருக்க முடியும். உலக அளவில் இந்தியாவிற்கு அழிக்க முடியாத அவமானத்தை தேர்தல் பத்திர ஊழல் கொடுத்துள்ளது" என்றார்.