அதிமுக ஒன்றிணைந்தால் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? - டி.டி.வி. தினகரன் பதில்
|எனக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது தனிப்பட்ட விதத்தில் எந்த வெறுப்பும் கிடையாது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்
தஞ்சாவூர்,
தஞ்சையில் இன்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அதிமுகவில் சசிகலா, நான், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கருத்து கூறி வருகின்றனர். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் அதிமுகவில் துரோகத்தை சுவாசமாக கொண்டு செயல்பட்டு வரும் சிலர் திருந்தினால் தான் அந்த எண்ணங்கள் நிறைவேறும்.
எனக்கு, எடப்பாடி பழனிச்சாமி மீது தனிப்பட்ட விதத்தில் எந்த வெறுப்பும் கிடையாது. அனைவரும் ஒன்றிணைந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். திமுக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றவில்லை. இதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
2023-ம் ஆண்டு இறுதியில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வோம். சமூக சேவை குறித்த இலவச திட்டங்கள் வரவேற்கும் நான் தேர்தலை மனதில் வைத்து கொண்டு மக்களை ஏமாற்றும் இலவச திட்டங்கள் ஒருபோதும் கூடாது என்பேன்.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிபதி ஜெயசந்திரன் அளித்த தீர்ப்பு அதிமுகவின் சட்ட விதிகளின்படி அளித்த தீர்ப்பு. தற்போது எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்த வழக்கு குறித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. அந்த தீர்ப்பும் எம்.ஜி.ஆர். வகுத்த சட்ட விதிகளின்படி அமையும் என எனது அனுபவத்தில் கூறுகிறேன்.
அதிமுக ஒன்றிணைந்தால் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அதன் பிறகு பார்ப்போம் என கூறுவேன். எடப்பாடி பழனிச்சாமி நிறைய துரோகம் செய்துவிட்டார். அதுபற்றி விரைவில் வெளியிடுவேன் என வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.