கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவில்லையெனில் அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் - சி.வி.சண்முகம்
|விழுப்புரம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவில்லையெனில் அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.1,509 கோடி மதிப்பில் மரக்காணத்தில் கொண்டு வரப்பட்டு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்து இன்று காலை விழுப்புரம் காந்தி சிலை அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திடீர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
அப்போது சி.வி.சண்முகம் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு மேலாகிறது. முதல்-அமைச்சர் ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை, புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மாறாக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் படிப்படியாக மூடுவிழா நடத்தி வருகிறார்.
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகத்தை உருவாக்கினோம். ஆனால் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதற்கு மூடுவிழா நடத்தி ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாழாக்கிவிட்டனர்.
அதுபோல் விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மரக்காணத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக ரூ.1,509 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அத்திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் இத்திட்டத்தை கொண்டு வர திட்டப்பணிகள் நடந்து வந்தன.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எப்படி பல்கலைக்கழகத்தை மூடியதை போல் இத்திட்டத்தையும் முடக்கி மக்கள் வாயில் மண்னை வாரி போட்டுள்ளனர். கடல்நீரை குடிநீராக்கும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட்டிருக்கிறது. இத்திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்று வெளிப்படையாக சொல்வதற்கு ஏன் அவர்களுக்கு தைரியமில்லை, திராணியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.