திருவாரூர்
இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்
|இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன.
மறைக்கா கோரையாறு
முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனத்தில் மறைக்கா கோரையாறு உள்ளது. மேலபெருமழை, பள்ளிமேடு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பாவனம் போன்ற பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களுக்கு இந்த ஆற்றின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது. கடைமடை பகுதிகளான இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாதவாறு ஆகாயதாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்து இருந்தது.
இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் பிரசுரமானது.
ஆகாயத்தாமரைகள் அகற்றம்
இதன் எதிரொலியாக இடும்பாவனம் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் முயற்சியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது முற்றிலும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த இடும்பாவனம் ஊராட்சி மன்றம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.