போலீசாரால் தேடப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை? போலீசில் புகார் அளித்த தாயார்
|பள்ளி மாணவனை ரூ.2 கோடி கேட்டு மிரட்டி கடத்திய, வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை,
மதுரையில் பள்ளி மாணவனை, ரூ.2 கோடி கேட்டு மிரட்டி கடத்திய, வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மைதிலி ராஜலட்சுமி (வயது 40). இவர்களுடைய மகன், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில், 11-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி ஆகியோரை ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை காண்பித்து கடத்தி சென்றனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து மாணவனை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி தர வேண்டும் என மிரட்டினர். இதுதொடர்பாக மைதிலி ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவன், ஆட்டோ டிரைவரை கடத்தியது முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் (வயது 45) என்பது தெரியவந்தது. போடியில் தலைமறைவாக இருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். செந்தில்குமார் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. செந்தில்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் கடத்தல் சம்பவத்தில் கூட்டாளிகளாக செயல்பட்ட தென்காசியை சேர்ந்த வீரமணி (30) மற்றும் காளிராஜ் (36), நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் (38) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனைவி சூர்யா(35), மதுரையை சேர்ந்த மகாராஜா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
சூர்யா, மகாராஜா ஆகியோரை பிடிக்க 4 தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையில் குஜராத்தில் சூர்யா தங்கியிருந்தபோது, தற்கொலை செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, "சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து இருப்பதாக எங்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது. அவரது தாயாரும், மகள் தற்கொலை செய்துள்ளாரா? என்பது பற்றி உறுதி செய்வதற்கு போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். ஐ.ஏ.எஸ். கணவரை பிரிந்தது, பெற்றோருக்கு எதிராக செயல்பட்டது, கடத்தல் வழக்கில் சிக்கிய விரக்தி உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்திருக்கலாம். இருப்பினும், அவரது தற்கொலை தகவலை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளோம்" என்றனர்.
போலீசில் சூர்யாவின் தாயார் புகார்
மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் சூர்யாவின் தாயார் உமா, அளித்துள்ள புகார் மனுவில், "குஜராத் போலீசில் இருந்து பேசினார்கள். அப்போது அவர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத் காந்திநகர் பகுதியில் கலெக்டர் பங்களாவில் என் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். என் மகள் சூர்யா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துள்ளார். இதற்கு மைதிலி ராஜலட்சுமி உள்பட 2 பேர் தான் காரணம். அவர்கள், என் மகளின் உடைமைகளையும், பணம், சொத்துக்களையும் மோசடி செய்தது மட்டுமின்றி, பொய் புகாரும் அளித்து மகளை அசிங்கப்படுத்தி விட்டனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவர்கள் 2 பேரின் சதி வேலையே காரணம். எனவே பொய் புகார் அளித்த அவர்கள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.