மிக்ஜம் புயல்: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மீட்புப் பணிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
|'மிக்ஜம்' புயலானது தற்போது சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது தற்போது சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. தற்போது 8 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க உள்ளது. புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் மீட்புப் பணிக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மிக்ஜம் புயல் இன்று பிற்பகல் 7.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர், என்று கூறப்பட்டுள்ளது.