புதுக்கோட்டை
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?
|தமிழ்நாடு சட்டசபையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20-ந் தேதி தாக்கல் செய்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அதில் இடம்பெற்று இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி தகுதித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
ரூ.10 கோடி நிதி
முதல் நிலைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500-ம், முதன்மை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மையம் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் உதவித்தொகை குறித்து, தேர்வு எழுத தயாராகி வரும் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவ-மாணவிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
என்ஜினீயரிங் மாணவி
புதுக்கோட்டையை சேர்ந்த கார்மேலா:- நான் சிவில் என்ஜினீயரிங் முடித்து எம்.இ. படித்து வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என லட்சியம் இருந்தது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்த பின் அடுத்ததாக என்ன படிக்கலாம் என இருந்த போது என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக தற்போதே படிக்க தொடங்கி விட்டேன். அடுத்த ஆண்டு (2024) இத்தேர்வுக்காக அறிவிப்பு வெளியாகும் போது நான் விண்ணப்பிப்பேன். குடிமைப்பணி தேர்வு எழுதும் நபர்களை ஊக்குவிப்பதற்காக முதல்நிலை தேர்வுக்கு தயாராகுவதற்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. என்னைப்போன்று ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகும் நபர்களை இது ஊக்குவிப்பதாக அமையும். மற்றவர்களையும் தேர்வெழுத ஊக்கம் ஏற்படுத்தும்.
ஏழை மாணவர்கள் பயன்பெறுவர்
விராலிமலை ஒன்றியம், ஆவூரை சேர்ந்த பெபின் ஜேசுராஜ்:- நான் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தக்கூடிய சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத உள்ளேன். அதற்கான பயிற்சிகளை நான் தற்போது மேற்கொண்டு வருகிறேன். எனது தந்தை விவசாயி என்பதால் இதற்கான செலவுகளை என்னால் செலுத்த இயலவில்லை. இந்தநிலையில் தமிழக அரசு குடிமைப்பணி தேர்வு எழுதுவோருக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் பங்களிப்பு மிக மிக குறைவாக உள்ளது. இதற்கு அவர்களின் பொருளாதார குறைபாடு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த திட்டம் மாணவர்கள் முதல் முயற்சியோடு இடைநிற்காமல் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வதற்கு வழிவகையாக அமையும். மேலும் மாணவர்கள் தங்கள் கல்விக்காக பெற்றோரை சார்ந்து இருக்கும் நிலையும் குறையும். இதனால் பெற்றோர்களுடைய ஒத்துழைப்பும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் தமிழக மாணவர்கள் இந்தியா முழுவதும் சென்று பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயன்பெறுவார்கள். இனிவரும் காலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வில் மாணவர்களின் ஆர்வமும், அவர்களின் பங்களிப்பும் அதிகமாகும். மேலும் எதிர்வரும் காலங்களில் ஊக்கத்தொகை வழங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் பல்வேறு மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள்.
வரவேற்கக்கூடியது
அறந்தாங்கி திருநாளூரை சேர்ந்த மாணவர் பிருத்விராஜ்:- நான் பி.காம். படித்து முடித்துள்ளேன். எனக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டும் என ஆசை உள்ளது. இதனால் புதுக்கோட்டையில் உள்ள ஒரு மையத்தில் சேர்ந்து தங்கி பயின்று வருகிறேன். அடுத்து நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பித்து எழுத உள்ளேன். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட குடிமைப்பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் தேர்ச்சி பெறும் வகையில், அத்தேர்வுக்கு தயாராகும் நபர்களை ஊக்குவிக்க அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை வரவேற்க கூடியது. இத்தொகை அவர்கள் பயில ஏதுவாக இருக்கும். இதன்மூலம் பலர் தேர்வு எழுத விருப்பப்படுவதோடு, அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
விராலிமலையை சேர்ந்த ஆறுமுகம்:- குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.7 ஆயிரத்து 500 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டமானது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்களிடையே தற்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த தேர்வை ஒவ்வொரு முறையும் அதிகளவில் மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர். ஆனால் தேர்ச்சி பெற இயலாத நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் குடும்ப சூழ்நிலை மற்றும் எதிர்கால தேவையை உணர்ந்து அடுத்தமுறை இத்தேர்வு எழுத தயாராகும் முயற்சியினை கைவிடுகின்றனர். தற்போது இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்திருக்கும் ஊக்கத்தொகையானது மாணவர்களுக்கு இன்னும் ஒருமுறை முயற்சி செய்ய பெரும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் வெறும் 1,000 பேருக்கு மட்டும் ஊக்கத்தொகையினை அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் இந்த திட்டத்தினை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் குரூப்-1 மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
வெற்றிக்கு வாய்ப்பு
குடிமைப்பணியில் பாதுகாப்பு உற்பத்தி துறை சிறப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி:- நான் கடந்த 2002-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வு எழுதி அதில் பாதுகாப்பு துறையில் பணி இடத்தை பெற்று பணியாற்றி வருகிறேன். நாங்கள் படிக்கும் போது இதுபோன்ற நிதி உதவி திட்டங்கள் எதுவும் இல்லை. பெற்றோர்களை சார்ந்தே படித்து தேர்வுகளை எழுதினோம். இதுபோன்ற திட்டங்கள் அப்போது இருந்திருந்தால் விரைவாக வெற்றி பெற்று பணிகளுக்கு சென்றிருப்போம். பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் உள்ளது. நம்முடைய மாநிலத்தில் தற்போது மாணவர்களுக்கு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் நிதி உதவி திட்டம் வரவேற்கத்தகுந்தது. இதன்மூலம் மாணவர்கள் பலர் பயனடைவதுடன், தேர்வுகளிலும் அதிகம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.